மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது - காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே குற்றச்சாட்டு


மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது - காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 May 2020 5:31 AM IST (Updated: 15 May 2020 5:31 AM IST)
t-max-icont-min-icon

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது என்று காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே குற்றம்சாட்டி உள்ளார்.

பெங்களூரு, 

காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வேளாண்மை சந்தைகள் சட்ட திருத்த மசோதாவை அவசரகதியில் கொண்டு வர கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இது விவசாயிகளுக்கு எதிரானது. சட்டசபையில் விவாதம் நடத்தாமல் அவசர சட்டமாக கொண்டு வருவது சரியா?. பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய-மாநில அரசுகள் செயல்படுகின்றன. விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை இந்த அரசுகள் அமல்படுத்த துடிப்பது ஏன்?.

விவசாய நிலங்களின் மீது பெரு நிறுவவனங்களுக்கு பிடியை மாநில அரசு விட்டுக்கொடுக்கிறது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அந்த நிறுவனங்களே விலையை தீர்மானிக்கிற நிலை வரவுள்ளது. கொரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் இத்தகைய விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை கொண்டு வருவது சரியல்ல.

20 லட்சம் கோடி

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு 50 நாட்கள் ஆகிறது. கோடிக்கணக்கான பேர் வேலை இழந்து தெருவுக்கு வந்துவிட்டனர். பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கு தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். ரூ.20 லட்சம் கோடிக்கு எத்தனை பூஜ்ஜியம் என்ற விஷயத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவதாக முன்பு மோடி சொன்னார். ஆனால் இதுவரை அதில் ஒரு பைசா கூட மீட்கப்படவில்லை. ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு திட்டம் வெறும் அறிவிப்பாக இருக்கக்கூடாது. அதை முழுமையாக செயல்படுத்த வேண்டும். விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

சம்பளம் வழங்கவில்லை

அமைப்புசாரா தொழிலாளர் களுக்கு இதுவரை எந்த உதவியையும் வழங்கவில்லை. கர்ப்பிணி பெண்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி நிவாரண உதவிகளை வழங்கவில்லை. பிரதமர் மோடி, வெறும் மாயாஜாலத்தை மட்டுமே காட்டுகிறார். தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் உதவிகளை அறிவித்துள்ளனர்.

ஆசிரியர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கவில்லை. மாநில அரசிடம் நிதி இல்லை. எந்த உதவிக்கும் நிதி உதவி கிடைக்கவில்லை. இவ்வளவு கஷ்டமான நேரத்திலும், கர்நாடகத்திற்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கவில்லை. கர்நாடகத்திற்கு வழங்க வேண்டியே நிதியையே ஒதுக்கவில்லை. கொரோனா தடுப்பு பணிகளுக்கு கர்நாடகத்தை தவிர்த்து பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

கொரோனா நெருக்கடி

கர்நாடகத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. கொரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது.”

இவ்வாறு ஈஸ்வர் கன்ட்ரே கூறினார்.

Next Story