‘பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்’ பிரேமலதா விஜயகாந்த் பேட்டி


‘பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்’ பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
x
தினத்தந்தி 15 May 2020 1:28 AM GMT (Updated: 15 May 2020 1:28 AM GMT)

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை அரசு, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

அரசூர்,

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தில் கடந்த 10-ந் தேதியன்று பள்ளி மாணவி ஜெயஸ்ரீ (வயது 15) என்பவர் முன்விரோதம் காரணமாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சிறுமதுரையில் உள்ள மாணவி வீட்டிற்கு நேரில் சென்று அங்குள்ள ஜெயஸ்ரீயின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சார்பில் ரூ.1 லட்சத்தை நிவாரண உதவியாக, மாணவியின் குடும்பத்தினருக்கு வழங்கினார்.

வன்முறை

அதன் பின்னர் பிரேமலதா விஜயகாந்த், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2 குடும்பத்திற்கு இருந்த பகையின் காரணமாக மாணவி ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்கிற அளவிற்கு மனிதாபிமானம் இல்லாத அந்த 2 பேரை என்கவுண்ட்டர் செய்து தக்க தண்டனை வழங்க வேண்டும். அதுதான் மக்களுக்கு தரக்கூடிய ஒரு நியாயமான தீர்ப்பாக இருக்கும். இனி இதுபோன்ற கொடூர செயல் எங்குமே நடக்காதவாறு இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் மீதான வன்முறை, கற்பழிப்பு, கொலை செய்வது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை அரசு, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மாணவியின் குடும்பத்திற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணம். அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப 2 பேருக்கும் உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அரசு செய்த மிகப்பெரிய தவறு

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வந்தது. இருந்தபோதிலும் ஊரடங்கின்போது அவசரப்பட்டு டாஸ்மாக் கடைகளை திறந்ததுதான் அரசு செய்த மிகப்பெரிய தவறு. டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனுவின் மீது தே.மு.தி.க.வின் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு இருக்கும் வரை டாஸ்மாக் கடையை திறக்க தே.மு.தி.க. ஒருபோதும் அனுமதிக்காது. மத்திய அரசின் ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில் இன்னும் 5, 6 நாட்களில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு கோடி ஒதுக்கப்படும் என்று அறிவிப்பார்கள். அதன் பின்னர் நாங்கள் முழுமையாக கருத்து சொல்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாநில துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய செயலாளர்கள் ஏழுமலை, ராமச்சந்திரன், நகர செயலாளர் அச்சுமுருகன், ஒன்றிய அவைத்தலைவர்கள் இளங்கோ, கரிகாலன், ஒன்றிய பொருளாளர்கள் செந்தில், குப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

நிவாரண பொருட்கள்

தொடர்ந்து கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு திருவெண்ணெய்நல்லூரில் தே.மு.தி.க. சார்பில் நிவாரணமாக அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு ஆட்டோ டிரைவர்கள், திருநங்கைகள், முடித்திருத்தும் தொழிலாளர்கள், என்று 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story