தூத்துக்குடியில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயிலில் இன்று 1,464 பேர் பயணம்
தூத்துக்குடியில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயிலில் இன்று (சனிக்கிழமை) 1,464 பேர் பயணம் செய்கின்றனர்.
தூத்துக்குடி,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இதில் பலர் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பீகாரை சேர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்காக இன்று (சனிக்கிழமை) சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் 24 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. மதியம் 2 மணிக்கு புறப்படும் ரெயில் மணியாச்சி, சேலம், ரேணிகுண்டா, விஜயவாடா, பல்ஹர்சா, நாக்பூர், இடார்சி, காட்னி, ஆரா, தானாபூர், ஹாஜிபூர் வழியாக பீகார் மாநிலம் முஷாபர்பூருக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 3-30 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயிலில் 1,464 பேர் பயணம் செய்து சொந்த ஊருக்கு செல்கின்றனர்.
கலெக்டர் ஆய்வு
இதையடுத்து தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் சிறப்பு ரெயில் நேற்று தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்துக்கு வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து வருபவர்களை மாவட்டத்தின் 15 எல்லைகளிலும் தீவிரமாக பரிசோதனை செய்து வருகிறோம். மாவட்டத்தில் 6 இடங்களில் தனிமைப்படுத்தும் முகாம் செயல்பட்டு வருகிறது.
அடிப்படை வசதிகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் 8 ஆயிரத்து 700 பேர் உள்ளனர். இதில் 4 ஆயிரத்து 107 பேர் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவர்களுக்கு சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பீகாருக்கு 263 பேரும், ஜார்கண்டுக்கு 140 பேரும் சென்றனர்.
நாளை (அதாவது இன்று) தூத்துக்குடியில் இருந்து பீகாருக்கு மற்றொரு சிறப்பு ரெயில் புறப்படுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 1,000 பேர், நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 464 பேர் ஆக மொத்தம் 1,464 பேர் புறப்பட்டு செல்கின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story