ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 1,464 பேர் சிறப்பு ரெயில் மூலம் அனுப்பிவைப்பு
வேலூர் உள்பட 5 மாவட்டங்களில் தங்கியிருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 1,464 பேர் காட்பாடியிலிருந்து டாட்டா நகருக்கு சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
காட்பாடி,
கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக வேலூரில் சி.எம்.சி.மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தவரகளும், இங்கு தொழில் செய்பவர்களும் வேலைவாய்ப்பை இழந்து வருமானமின்றி தவித்தனர். அவர்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் சிறப்பு ரெயில் மூலம் படிப்படியாக அனுப்பப்பட்டு வருகின்றனர்.
அதன்படி கடந்த 6-ந் தேதி முதல் காட்பாடியிலிருந்து சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்க மாநிலங்களை சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் 5 கட்டங்களாக சிறப்பு ரெயில்கள் மூலம் அவர்களுடைய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 6-வது கட்டமாக அசாம் மாநிலத்தை சேர்ந்த 146 பேர் நேற்று முன்தினம் கோவையில் இருந்து அசாம் மாநிலம் சென்ற சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் 7-வது கட்டமாக வேலூரில் தங்கியிருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் 625 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தங்கியிருந்த 361 தொழிலாளர்கள், திருப்பத்தூர் மாவட்டத்தில் தங்கியிருந்த 20 பேர், விழுப்புரம் மாவட்டத்தில் தங்கியிருந்த 129 பேர், திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கி இருந்த 329 பேர் என மொத்தம் 1,464 பேர் நேற்று காட்பாடிக்கு அரசு சிறப்பு பஸ்கள் மூலம் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு நேற்று அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையாக ரெயில் நிலையத்திற்குள் சென்றனர். அங்கு அவர்களுக்கு வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது.
தொடர்ந்து அவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறப்பு ரெயில் பெட்டிகளில் ஏறி அமர்ந்தனர். அவர்களை வேலூர் உதவி கலெக்டர் கணேஷ், காட்பாடி தாசில்தார் பாலமுருகன், துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். பகல் 1.30 மணிக்கு டாடா நகருக்கு ரெயில் புறப்பட்டு சென்றது.
Related Tags :
Next Story