ஊரடங்கு எதிரொலி: ஆபத்தை விளைவிக்கும் மாஞ்சாநூல் பட்டங்கள் அதிகரிப்பு
வேலூரில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பட்டங்களை மாஞ்சாநூலில் கட்டி விடுவது அதிகரித்து வருகிறது.
வேலூர்,
கொரோனா வைரசை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கின்றனர். எந்திரம் போல் வேலைக்கு சென்று வந்தவர்கள் இன்று வேலையை இழந்து வருமானமின்றி தவிக்கின்றனர்.
இந்த தருணத்தில் பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மறந்துபோன தாயம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகனை விளையாடி பாரம்பரிய விளையாட்டுக்கு உயிர்கொடுத்து வருகின்றனர்.
இவை ஒருபுறம் இருக்க காலை, மாலை நேரங்களில் வேலூர் மாநகரில் பலர் தங்கள் வீடுகளின் மாடிகளில் நின்று பட்டம் விட்டு மகிழ்கின்றனர். குழந்தைகளும் பட்டங்களை பறக்க விட்டு குதூகலிக்கின்றனர். ஆனால் ஆபத்தை விளைவிக்கும் வகையில் சிலர் மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விடுகின்றனர். இது உயிரை பறிக்கும் ஆபத்தான செயல் என்பதை அறிந்தும் அவர்கள் அந்த விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் பணியாற்றி வரும் வார்டன் ஒருவர் பணி முடிந்து வீட்டுக்கு அண்ணாசாலையில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் விடப்பட்ட பட்டத்தின் மாஞ்சா நூல் அறுந்து விட்டதால் சாலையின் குறுக்கே மஞ்சா நூல் கிடந்துள்ளது. அதை கவனிக்காமல் ஜெயில் வார்டன் சென்றபோது அவரின் கழுத்தில் பட்டு அவர் காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊரடங்கு தொடரும் நிலையில் மாநகரின் பல்வேறு இடங்களில் பட்டம் விடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 3-ந் தேதி சில வாலிபர்கள் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுவதாக வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் மாஞ்சா நூலை பயன்படுத்தி ஆபத்தை விளைவிக்கும் வகையில் பட்டம் விட்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “வீட்டின் மாடியில் நின்று பலர் சாதாரண நூலை பயன்படுத்தி பட்டம் விட்டு மகிழ்கின்றனர். ஆனால் சில வாலிபர்கள் வேண்டும் என்றே கண்ணாடி துண்டுகளை பொடியாக்கி, அதை பசையுடன் கலந்து சாதாரண நூலை மாஞ்சா நூலாக மாற்றி அதன் மூலம் பட்டம் விடுகின்றனர்.
மாஞ்சா நூல் எளிதில் அறுந்து விடாது. எனவே அதற்காகவும், பிறரின் பட்டத்தை எளிதில் அறுத்து விடவும் மாஞ்சா நூலை பயன்படுத்துகின்றனர். இதன் ஆபத்தை அவர்கள் உணர்வதில்லை. எனவே மீண்டும் ஒரு விபரீதம் நிகழ்வதற்குள் ட்டம் விடுபவர்களை பிடித்து எந்த நூலை பயன்படுத்துகின்றனர் என்பதை வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிக்க வேண்டும். மாஞ்சா நூலை பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
Related Tags :
Next Story