சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு நடைபயணமாக வந்த தொழிலாளர்கள்
சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு வடமாநில தொழிலாளர்கள் நடைபயணமாக வந்தனர்.
திருப்பூர்,
கொரோனா பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன. இதில் பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர். திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்த வடமாநிலத் தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.
வருமானம் இன்றி தவித்த அவர்கள், செலவுக்கு பணமில்லாமலும், உணவுக்கு உத்தரவாதமின்றியும் ஒவ்வொரு நொடியும் வாடிவதங்கினர். எனவே தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதன்படி பீகார், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ரெயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனாலும் போதுமான சிறப்பு ரெயில் இயக்கப்படாததால், திருப்பூரில் இன்னும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் தினமும் கலெக்டர் அலுவலகம் வந்து தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு முறையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படாமல் அந்தந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இதேபோல் நேற்று திருப்பூர் காங்கேயம் ரோடு பெரிய தோட்டம் பகுதியில் தங்கியிருந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தாங்கள் உணவு மற்றும் தங்குமிடம் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரியும் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நடைபயணமாக வந்தனர்.
இதையறிந்த திருப்பூர் தெற்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சொந்த ஊருக்கு செல்ல ஆன்லைனில் பதிவு செய்துள்ளதாகவும், ஆனால் அனுமதி கிடைக்கவில்லை என்றனர். தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அவர்களை அவர்களது இருப்பிடங்களுக்கு திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினர். இருப்பினும் தொழிலாளர்கள் திரும்பிச் செல்லாமல் அப்பகுதியிலேயே நீண்ட நேரம் அமர்ந்திருந்தனர்.
அவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியினர் உணவு ஏற்பாடு செய்வதாக கூறியதைத் தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். எனவே சொந்த ஊர் செல்ல விரும்பும் வட மாநில தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முறையான வழிகாட்டுதல்கள், அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
Related Tags :
Next Story