வெளிமாநிலத்தில் இருந்து நெல்லை வந்த மக்களை மடக்கிய போலீசார்


வெளிமாநிலத்தில் இருந்து நெல்லை வந்த மக்களை மடக்கிய போலீசார்
x
தினத்தந்தி 16 May 2020 4:15 AM IST (Updated: 16 May 2020 2:39 AM IST)
t-max-icont-min-icon

வெளிமாநிலத்தில் இருந்து நெல்லை வந்த மக்களை போலீசார் மடக்கி பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மானூர், 

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் வேலை செய்யும் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் திரும்புவதை கண்காணிப்பதற்காக நெல்லை மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி கங்கைகொண்டான், சீவலப்பேரி, பாறைகுளம், கிருஷ்ணாபுரம், வன்னிக்கோனேந்தல், புதூர், நாங்குநேரி இந்திரா நகர், இட்டமொழி, காவல்கிணறு, விஸ்வநாதபுரம், விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட 15 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து பஸ், கார் மூலம் வருபவர்கள் அங்கு பரிசோதனைக்காக தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். கங்கைகொண்டான் சோதனைச்சாவடிக்கு வருபவர்கள் அருகே சிப்காட் பகுதியில் உள்ள எல்காட் நிறுவன அலுவலக வளாகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

அங்கு சமூக இடைவெளியுடன் அவர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்‘ மூலம் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்படுகிறது. பின்னர் அவர்களுக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே, மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் இருப்பதை அறிந்து சில வாகன ஓட்டிகள் கிராமங்கள் வழியாக புகுந்து சோதனைச்சாவடியை கடந்து ஊருக்குள் வந்து விடுகின்றனர். இதுவும் கொரோனா தொற்று பரவலுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. நேற்று பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் கங்கைகொண்டான் வழியாக நெல்லை மாவட்டத்துக்கு ஏராளமானோர் வந்தனர். அவர்கள் அனைவரும் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் மும்பை மற்றும் சூரத் பகுதிகளில் நெல்லை மாவட்டம் மானூர் வட்டாரத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வர வேண்டுமென்று கருதிய 30-க்கும் மேற்பட்டவர்கள் தனியாக ஒரு பஸ் பிடித்து நேற்று மானூர் வந்தனர். மேலும் இவர்கள் கங்கைகொண்டான் சோதனைச்சாவடிக்கு வராமல் கிராமங்கள் வழியாக மானூர் வந்ததாக போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து உஷாரான மானூர் போலீசார் உடனடியாக விரைந்து சென்று மானூருக்கு வந்த அந்த பஸ்சை மடக்கி பிடித்தனர். அதில் இருந்த அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்காக கங்கைகொண்டான் சோதனைச்சாவடிக்கு அனுப்பி வைத்தனர்.

சோதனைச்சாவடிகள் இருப்பதை அறிந்து மாற்று வழியாக நெல்லை மாவட்டத்துக்குள் வருவதை தடுக்க தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அய்யனாரூத்து, இலந்தைகுளம் வழித்தடம், புதுக்குடி பிராஞ்சேரி வழித்தடத்திலும் போலீசாரை நியமித்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் 3 ஆயிரம் பேர் வருவதால் பரபரப்பு

மராட்டியம், குஜராத் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மேலும் 3 ஆயிரம் பேர் பல்வேறு வாகனங்களில் நெல்லை நோக்கி வந்து கொண்டிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் இன்று (சனிக்கிழமை) நெல்லைக்கு வந்து சேர்வார்கள் என பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பாதுகாப்பு கருதி அவர்களுக்கு பரிசோதனை, சிகிச்சை, தனிமைப்படுத்துதல் என பல்வேறு பணிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அவர்களில் 15 சதவீதம் பேருக்கு கொரோனா இருக்கலாம் எனவும் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.


Next Story