மராட்டியத்தில் 2-வது நாளாக புதிய உச்சம்: கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை தாண்டியது - மும்பையில் மேலும் 933 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் 2-வது நாளாக கொரோனா புதிய உச்சத்தை அடைந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியது. மும்பையில் மேலும் 933 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
மும்பை,
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி உள்ள கொடிய கொரோனா இந்தியாவையும் புரட்டி போட்டுள்ளது.
இந்திய அளவில் மராட்டியம் தான் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. இங்கு கொரோனா புதிய வேகமெடுத்து பரவி வருகிறது. கடந்த 8 நாட்களாக மாநிலத்தில் தினமும் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்றும் புதிதாக 1,576 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மராட்டியத்தில் வைரஸ் நோயால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்து 100 ஆக உயர்ந்து உள்ளது.
கடந்த புதன்கிழமை 1,495 பேருக்கு ெகாரோனா பாதிப்பு ஏற்பட்டது தான் அதிகபட்சமாக இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் 1,602 பேருக்கு தொற்று உறுதியாகி புதிய உச்சத்தை தொட்டது. நேற்று பாதிப்பு அதை விட சற்று குறைந்து இருந்தாலும், 2-வது நாளாக புதிய உச்சத்தை அடைந்து உள்ளது.
மேலும் கடந்த 11 நாளில் மாநிலத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்து இருக்கிறது.
1,068 பேர் பலி
இதேபோல மாநிலத்தில் மேலும் 49 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இவர்களில் 29 பேர் ஆண்கள். 20 பேர் பெண்கள். இதனால் இங்கு ெதாற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,068 ஆக அதிகரித்து உள்ளது.
மராட்டியத்தில் இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்து 436 பேருக்கு கொரோனா பரிேசாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேபோல மாநிலம் முழுவதும் தற்போது 3 லட்சத்து 29 ஆயிரத்து 302 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 16 ஆயிரத்து 306 பேர் தனிமை மையங்களில் உள்ளனர்.
மும்பை
மாநில தலைநகர் மும்பையில் கொரோனா காட்டுத்தீயாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக 998 போ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்றும் நகரில் 933 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இதனால் நிதி தலைநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 512 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல மும்பையில் மேலும் 34 பேர் ஆட்கோல்லி ேநாய்க்கு பலியாகி உள்ளனர். இதில் 21 பேர் ஆண்கள். 13 பேர் பெண்கள். இதுவரை நகரில் 655 பேர் தொற்று நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.
ஆம்புலன்சுகளாக மாறிய பஸ்கள்
இதுதவிர 4 ஆயிரத்து 568 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர். இதில் புதிதாக 334 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.
இதற்கிடையே ஆம்புலன்ஸ் பற்றாக்குறை காரணமாக மும்பை மாநகராட்சி பெஸ்ட் பஸ், அரசு பஸ்களை நோயாளிகளை வீடுகளில் இருந்து சிகிச்சை மையங்களுக்கு அழைத்து செல்ல பயன்படுத்த தொடங்கி உள்ளது. இந்த பணியில் 70 பெஸ்ட், 15 அரசு பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த பஸ்களை இயக்கும் டிரைவர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஒரு வாரத்துக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் (பி.பி.இ. கிட்ஸ்) வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கூறியுள்ளது.
Related Tags :
Next Story