ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு: சேலத்தில் மீண்டும் வேலையை தொடங்கிய சலவைத்தொழிலாளர்கள்


ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு: சேலத்தில் மீண்டும் வேலையை தொடங்கிய சலவைத்தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 16 May 2020 9:39 AM IST (Updated: 16 May 2020 9:39 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் சலவைத்தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் வேலையை தொடங்கி உள்ளனர்.

சேலம்,

ஆண்டு முழுவதும் ஓய்வின்றி மற்றவர்களின் ஆடைகளை துவைத்து தூய்மையாக்கும் உன்னத வேலையில் சலவை தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றங்கரை படித்துறையிலும், நகர்புறங்களில் உள்ள சலவைத்துறையிலும் துணிகளை துவைத்து வரும் அவர்கள், வெண்மை நிற துணிகளில் உள்ள அழுக்குகளையும், கரைகளையும் போக்குவதற்கு, அவற்றை வெள்ளாவியில் அவித்து சலவை செய்தனர். மேலும், பகலில் சலவை செய்து காய வைத்த துணிகளை இரவில் கண் அயராமல் இஸ்திரி செய்து மடித்து வைத்தனர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் இருந்த ஊரடங்கு இவர்களையும் விட்டு வைக்கவில்லை. துணிகளை சலவை செய்வதற்கு கொடுத்தால், கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ? என்று பயந்து வீடுகளிலேயே பொதுமக்கள் சலவை செய்தனர். மேலும் ஓட்டல்கள், பள்ளி, கல்லூரி, ஆஸ்பத்திரிகள் முழு வீச்சில் இயங்கவில்லை. இதனால் சலவைக்கு துணி கிடைக்காமல் அவர்கள் எந்தவித வருமானமும் இல்லாமல் தவித்து வந்தனர்.

ஊரடங்கில் தளர்வு

சேலம் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சலவைத்தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். கடந்த 2 மாதங்களாக சலவைத்தொழில் செய்ய முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இதில், டீக்கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள், பூக்கடைகள், ஹார்டுவேர்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. சலவை தொழில் உள்பட பல்வேறு தொழில்களை கட்டுப்பாடுகளுடன் செயல்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து சலவைத்தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் வேலையை தொடங்கி உள்ளனர். இதனால் அவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சேலம் மாநகரில் அணைமேடு பகுதியில் உள்ள சலவை துறையில் சலவைத்தொழிலாளர்கள் துணியை துவைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அவர்கள் சலவை செய்த துணிகளை அங்குள்ள கொடிகளில் உலர்த்துவதற்காக வரிசையாக தொங்க விட்டுள்ளனர். அவர்கள் சமூக இடைவெளி விட்டு முறைப்படி பாதுகாப்பாக தொழிலை மேற்கொள்கிறார்கள்.

அந்த சலவைத்துறையில் 32 தொழிலாளர்கள் தினமும் துணிகளை சலவை செய்யும் பணியில் ஈடுபடலாம். அந்த பணியில் நேற்று ஆண்களும், பெண்களும் மும்முரமாக ஈடுபட்டனர். மீண்டும் வேலையை தொடங்கி உள்ளபோதிலும் அவர்கள் மீண்டும் பழைய வருவாயை ஈட்ட நீண்ட காலம் ஆகும் என்று தெரிவித்தனர்.

சேலம் மட்டுமின்றி மேட்டூர், கொளத்தூர், எடப்பாடி உள்ளிட்ட காவிரி ஆற்று கரையோரம் பகுதிகளிலும் சலவைத் தொழிலாளர்கள் மீண்டும் துணிகளை சலவை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story