மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.35 லட்சம் செம்மரக் கட்டைகள் பறிமுதல்
சென்னையில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.35 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் விமானத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
எனினும் சரக்கு விமான சேவை மட்டும் தொடர்ந்து இயங்கி வருகிறது. சென்னையில் இருந்து மலேசியாவுக்கு செல்ல இருந்த சரக்கு பொருட்களை, சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது பெரிய மரப்பெட்டிகளில் எவர்சில்வர் எண்ணெய் விளக்குகள் அனுப்பப்படுவதாக எழுதப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த மரப்பெட்டிகளை உடைத்து பார்த்தனர். அதில் விளக்குகளுக்கு பதிலாக செம்மரக்கட்டைகள் மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர்.
சர்வதேச சந்தையில் சுமார் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 1,050 கிலோ எடைகொண்ட அந்த செம்மரக்கட்டைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த மரப்பெட்டிகள் மீது இருந்த முகவரி மற்றும் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அது போலி என தெரியவந்தது.
இது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் டெல்லியை சேர்ந்த ஏற்றுமதியாளர் ஒருவர், அந்த மரப்பெட்டிகளை மலேசியாவுக்கு அனுப்ப முயன்றதை கண்டுபிடித்தனர். டெல்லி ஆசாமியை சுங்க இலாகா அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story