விழுப்புரம் அருகே வங்கியில் கொள்ளை முயற்சி மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு


விழுப்புரம் அருகே வங்கியில் கொள்ளை முயற்சி மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 17 May 2020 7:36 AM IST (Updated: 17 May 2020 7:36 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிந்தாமணி கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் நேற்று முன்தினம் மாலை வாடிக்கையாளர் சேவை பணிகள் முடிவடைந்ததும் அதன் ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டு சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை வங்கி ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்தனர். அப்போது வங்கியின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கம்பிகள் அறுத்து எடுக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

போலீசார் விசாரணை

உடனே கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது எந்தவொரு பொருட்களும் சிதறாமல் அப்படியே இருந்தது. வங்கி பாதுகாப்பு பெட்டக அறையின் கதவும் உடைக்கப்படாமல் இருந்தது. பின்னர் இதுபற்றி வங்கி ஊழியர்கள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன்பேரில் வங்கிக்கு அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டனர்.

இதுகுறித்து அவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகேசன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் வங்கிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

நகை, பணம் தப்பியது

தொடர்ந்து, வங்கியின் உள்ளேயும் மற்றும் வெளியேயும் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் நள்ளிரவில் யாரோ மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி கொள்ளையடிக்க வந்திருப்பதும், அவர் வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே நுழைய முயன்ற சமயத்தில் அப்பகுதியில் ஆள்நடமாட்டம் இருந்ததால் அந்த மர்ம நபர், வங்கிக்குள் செல்லாமல் அங்கிருந்து தப்பி ஓடியதும் தெரியவந்தது.

இதனால் வங்கியில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், பணம் கொள்ளை போகாமல் அதிர்ஷ்டவசமாக தப்பியது. மேலும் வங்கியில் இரவு காவலாளியை பணியில் அமர்த்தும்படி அதிகாரிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story