ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு: விவசாயிகள், தொழிலாளர்களுக்கு ஒன்றும் இல்லை - சித்தராமையா கருத்து


ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு: விவசாயிகள், தொழிலாளர்களுக்கு ஒன்றும் இல்லை - சித்தராமையா கருத்து
x
தினத்தந்தி 18 May 2020 5:46 AM IST (Updated: 18 May 2020 5:46 AM IST)
t-max-icont-min-icon

ரூ.20 லட்சம் கோடி தொகுப்பில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு ஒன்றும் இல்லை என்று சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி தொகுப்பை பிரதமர் மோடி அறிவித்தார். இதுகுறித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 5 நாட்கள் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

கொரோனாவால், மனித இனம் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்துள்ளது. லட்சக் கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் குழந்தைகளுடன் நடந்த சொந்த ஊருக்கு செல்கிறார்கள். இந்த தொகுப்பில் இந்த தொழிலாளர்களுக்கு எதுவும் இல்லை. அதாவது இது நிர்வாண மனிதர்கள் முன்பு அரசன் ஆடைகளுடன் ஊர்வலம் செல்வது போல் உள்ளது.

கஜானாவை நிரப்ப முயற்சி

மக்களின் கைகளில் பணத்தை கொடுக்க வேண்டும் என்று பல்வேறு பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் பிரதமர் மோடி, காலியாக உள்ள அரசின் கஜானாவை நிரப்ப முயற்சி செய்கிறார். மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்களால், ஏழைகள், கூலித்தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை.

நாட்டில் 13 கோடி ஏழைகளுக்கு மாதம் தலா ரூ.5,000 வழங்கினால் அரசுக்கு ரூ.65 ஆயிரம் கோடி செலவாகும்.தலா ரூ.7,000 வழங்கினால் ரூ.97 ஆயிரத்து 500 கோடி செலவாகும். இதை கூட மத்திய அரசால் வழங்க முடியாதா?. அந்த அளவுக்கு அரசு திவாலாகிவிட்டதா?. விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டது. ஆனால் அதை செய்யவில்லை.

பாதுகாப்பில் சமரசம்

நாட்டில் 6.2 கோடி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில் 45 லட்சம் சிறு தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே, அரசு அறிவித்துள்ள சலுகைகள் கிடைக்கும். நாட்டின் பாதுகாப்பு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 74 சதவீதமாக மத்திய நிதி மந்திரி உயர்த்தியுள்ளார். இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பில் பிரதமர் மோடி சமரசம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளார்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Next Story