சேலம் வ.உ.சி. மார்க்கெட்டில் கடைகளை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் எதிர்ப்பு


சேலம் வ.உ.சி. மார்க்கெட்டில் கடைகளை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 18 May 2020 9:27 AM IST (Updated: 18 May 2020 9:27 AM IST)
t-max-icont-min-icon

சேலம் வ.உ.சி. மார்க்கெட்டில் கடைகளை இடமாற்றம் செய்வதற்கு அங்குள்ள வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சேலம்,

சேலம் கடைவீதியில் வ.உ.சி. மார்க்கெட் உள்ளது. இங்கு காய்கறி, பூக்கள், வாழை இலை, தேங்காய் கடைகள் என மொத்தம் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கடைகளை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய கடைகள் கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக வ.உ.சி. மார்க்கெட்டில் உள்ள கடைகளை காலி செய்யுமாறு அதன் வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

வியாபாரிகள் எதிர்ப்பு

மேலும் வ.உ.சி. மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் சுமார் 60 பேருக்கு மட்டும் தற்காலிகமாக சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கத்தில் கடைகள் செயல்படலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. இந்த நடவடிக்கைக்கு வ.உ.சி. மார்க்கெட் வியாபாரிகள் இடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில் வ.உ.சி. மார்க்கெட் வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலையில் நேரு கலையரங்கம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் வ.உ.சி. மார்க்கெட்டில் உள்ள கடைகளை காலி செய்ய மாட்டோம் என அறிவித்தனர்.

இது குறித்து சேலம் வ.உ.சி. காய்கறி மார்க்கெட் சங்கத்தின் செயலாளர் பாலமுரளி, துணை செயலாளர் சண்முகவேல் ஆகியோர் கூறியதாவது:-

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வ.உ.சி. மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்துவிட்டு புதிய கடைகள் கட்டப்படுகின்றன. அதற்கு பதிலாக சேலம் பழைய பஸ் நிலையம் அருகே தற்காலிகமாக கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் எங்களது கடைகளை உடனடியாக காலி செய்யுமாறும், அதற்கு பதிலாக நேரு கலையரங்கத்திற்குள் கடைகளை வைத்துக்கொள்ளலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

அனுமதி

ஏற்கனவே ஊரடங்கு உத்தரவால் 2 மாதங்களாக வியாபாரம் இல்லை. இந்நிலையில் வ.உ.சி. மார்க்கெட்டில் இருந்து கடைகளை இடமாற்றம் செய்தால் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே தற்காலிக கடைகள் கட்டும் வரையில் நாங்கள் அனைவரும் மார்க்கெட்டில் கடைகளை வைத்திருப்போம். நேரு கலையரங்கத்தில் 60 நபர்களுக்கு மட்டுமே கடைகள் வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வ.உ.சி மார்க்கெட்டில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மீதியுள்ள வியாபாரிகளின் நிலைமை என்ன ஆகும்? என்று நினைத்து பார்க்க வேண்டும். எனவே தற்காலிக கடைகள் கட்டும் வரை வ.உ.சி. மார்க்கெட்டில் கடைகள் செயல்பட அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story