தொடர் ஊரடங்கு உத்தரவால் 9 வாரங்களாக மூடப்பட்டுள்ள அனுப்பர்பாளையம் வாரச்சந்தை 3 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் பாதிப்பு


தொடர் ஊரடங்கு உத்தரவால் 9 வாரங்களாக மூடப்பட்டுள்ள அனுப்பர்பாளையம் வாரச்சந்தை 3 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் பாதிப்பு
x

ஊரடங்கு உத்தரவு காரணமாக அனுப்பர் பாளையம் வாரச்சந்தை 9 வாரங்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் 3 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் அனுப்பர்பாளையம் வாரச்சந்தை வடக்கு பகுதி மக்களுக்கு பயனுள்ள சந்தையாக இருந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமைதோறும் கூடும் இந்த சந்தைக்கு அனுப்பர்பாளையம், அங்கேரிபாளையம், பெரியார்காலனி, ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், திருமுருகன்பூண்டி சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். குறிப்பாக வடமாநில தொழிலாளர்களின் வரபிரசாதமாகவும் இது அமைந்துள்ளது.

இந்த சந்தையின் உள்புறம் 200 கடைகளும், வெளியே சாலையோரம் 150 கடைகளும் வாரந்தோறும் அமைக்கப்படும். அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி, சேவூர், குன்னத்தூர், தெக்கலூர், சென்னிமலை, சத்தி, புளியம்பட்டி, அன்னூர், மேட்டுப்பாளையம் உள்பட திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் இந்த சந்தையில் கடைகள் அமைத்து பிழைப்பு நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வாழ்வாதாரம் பாதிப்பு

இதையடுத்து அந்த மாதம் 22-ந்தேதி முதல் நேற்று வரை 9 வாரங்களாக தொடர்ந்து அந்த சந்தை மூடப்பட்டுள்ளது. இதனால் அந்த சந்தையில் கடை அமைக்கும் 350 வியாபாரிகள் மற்றும் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். மேலும் சந்தைக்கு காய்கறி, பழங்கள் மற்றும் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் வியாபாரிகள், சந்தை வியாபாரிகள் விவசாயிகள் உள்பட 3 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கி உள்ளது.

எப்போது திறக்கப்படும்?

சந்தைகளை திறக்க அரசு முறையான அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. எனவே வியாபாரிகள் சந்தை திறக்கும் வரை அந்தந்த பகுதிகளில் சாலையோரம் கடைகளை அமைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். பெரும்பாலான வியாபாரிகள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களாக இருப்பதாலும், இந்த சந்தையையே வாழ்வாதாரமாக கொண்டிருப்பதாலும் சந்தை எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் தினமும் வந்த வண்ணம் உள்ளனர்.

சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக கொரோனா தொற்று அதிக அளவில் பரவி, பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் அனுப்பர்பாளையம் வாரச்சந்தையை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மார்ச் 25-ந்தேதிக்கு முன்பு 22-ந்தேதியே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

Next Story