சிறப்பு ரெயிலில் செல்ல டோக்கன் கிடைக்காததால் பஸ்சில் தலா ரூ.6,400 செலுத்தி ஒடிசா சென்ற 28 தொழிலாளர்கள்


சிறப்பு ரெயிலில் செல்ல டோக்கன் கிடைக்காததால் பஸ்சில் தலா ரூ.6,400 செலுத்தி ஒடிசா சென்ற 28 தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 18 May 2020 4:21 AM GMT (Updated: 18 May 2020 4:21 AM GMT)

திருப்பூரில் இருந்து ஒடிசா செல்ல சிறப்பு ரெயிலில் டோக்கன் கிடைக்காததால் 28 தொழிலாளர்கள் தலா ரூ.6400 கட்டணமாக செலுத்தி பஸ்சில் ஒடிசா செல்கிறார்கள்.

அனுப்பர்பாளையம்,

வந்தோரை வாழ வைக்கும் ஊராகவும், டாலர் சிட்டி என்ற பெருமைக்குரிய நகரமாகவும் திருப்பூர் விளங்கி வருகிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து தொழிலாளர்கள் திருப்பூரில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எண்ணிக்கையும் திருப்பூரில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழக வெளிமாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர். ஆனால் வடமாநில தொழிலாளர்கள் செல்வதற்கு போதுமான ரெயில் வசதி இல்லாததால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் திருப்பூரிலேயே சிக்கி கொண்டனர். தொடர் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலைக்கு செல்ல முடியாமலும், செலவுக்கு பணம் இல்லாத காரணத்தாலும் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கே செல்ல முடிவு செய்தனர்.

சிறப்பு ரெயில்

இந்த நிலையில் அந்தந்த மாநில அரசுகள் திருப்பூரில் உள்ள தொழிலாளர்களை சிறப்பு ரெயில் மூலமாக அழைத்து செல்ல முடிவு செய்தன. இதற்காக திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள தொழிலாளர்களின் பெயர் விபரங்களை வருவாய்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். இதன்படி கடந்த 10 நாட்களில் சிறப்பு ரெயில்கள் மூலமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

திருப்பூரில் அனுப்பர்பாளையம், அங்கேரிபாளையம், வெங்கமேடு, ஆத்துப்பாளையம், ஸ்ரீநகர், போயம்பாளையம், பிச்சம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். எனவே கடந்த 1 மாதமாக பிச்சம்பாளையம்புதூர் மற்றும் வெங்கமேடு அரசு பள்ளிகளில் சிறப்பு ரெயிலில் பயணம் செல்பவர்களுக்கான டோக்கன் வழங்கப்படுகிறது. ஆனால் ஒருசிலருக்கு டோக்கன் வழங்கப்படும் தகவல் கிடைத்த உடன் டோக்கனுக்கு தகுதியில்லாத ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கு தினமும் அங்கு குவிந்து வருகின்றனர்.

பஸ்சில் பயணம்

நள்ளிரவு, அதிகாலை என இரவு, பகலாக சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அதிக அளவில் தொழிலாளர்கள் சுற்றி திரிகின்றனர். இதேபோல் டோக்கன் வழங் கப்படுகிறது என்று அடிக்கடி வதந்தி பரப்பப்படுவதாலும் தொழிலாளர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். இதை தடுக்க அந்த பகுதிகள் முழுவதும் போலீசார் தொடர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சிறப்பு ரெயிலுக்கு டோக்கன் கிடைக்காத நிலையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த செலவில் பஸ்சில் வெளிமாநிலங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதன்படி நேற்று முன்தினம் அங்கேரிபாளையத்தில் இருந்து ஒரு தனியார் பஸ் ஒடிசா மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றது. அதில் அந்த பகுதியில் தங்கி இருந்த 28 பேர் பயணம் செய்தனர்.

தலா ரூ.6,400 கட்டணம்

அந்த பஸ்சில் ஒடிசா செல்ல தலா ஒருவருக்கு ரூ.6,400 வீதம் 28 பேருக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

எனவே தொழிலாளர்கள் யாரும் தன்னிச்சையாக முடிவு எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் கூறி உள்ள நிலையில் எப்படியாவது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் திருப்பூரில் இருந்து பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பிறமாநிலங்களுக்கு செல்வது பரிதாபத்தை ஏற்படுத்தி வருகிறது.

Next Story