வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கின; அனைவரும் முக கவசம் அணிந்து பணியாற்றினர்


வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கின; அனைவரும் முக கவசம் அணிந்து பணியாற்றினர்
x
தினத்தந்தி 18 May 2020 11:30 PM GMT (Updated: 18 May 2020 8:34 PM GMT)

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கின. ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியுடன் பணியாற்றினார்கள்.

வேலூர், 

ஊரடங்கால் தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக இயங்கவில்லை. இந்த நிலையில் அனைத்து அரசு அலுவலகங்களும் 18-ந் தேதி முதல் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கின. வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்துறை, மாவட்ட வழங்கல் அலுவலகம், கருவூலத்துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றினர். அனைத்து ஊழியர்களும் முக கவசம் அணிந்திருந்தனர். அவர்கள் இடைவெளி விட்டு அமர்ந்து பணிபுரியவும், சானிடைசர் மூலம் கைகளை கழுவவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வேலூர் மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், சமூக நலத்துறை அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத பணியாளர்கள் பணிபுரிந்தனர். நேற்று பணிக்கு வராதவர்கள் மற்ற நாட்களில் வேலைக்கு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்துக்குள் பயணம் செய்ய இ-பாஸ் பெற தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் தங்கள் கார்களில் அலுவலகத்துக்கு வந்ததை காண முடிந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் வசதிக்காக வேலூரில் இருந்து ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டது.

இதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்ல அரசு ஊழியர்களுக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருப்பத்தூர்க்கு பஸ்கள் இயக்கப்பட்டன. வேலூரில் இருந்து நேற்று காலை 7.30 மணிக்கும், தர்மபுரியிலிருந்து 8 மணிக்கும், கிருஷ்ணகிரியில் 8.30 மணிக்கும் சிறப்பு பஸ்கள் புறப்பட்டு திருப்பத்தூர் பஸ் நிலையத்திற்கு வந்தது. ஒவ்வொரு பஸ்ஸிலும் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் முக கவசம் அணிந்து வந்தனர். பஸ்ஸில் ஏறுவதற்கு முன்பு அனைவருக்கும் கையில் தடுப்பு மருந்து பூசப்பட்டு பஸ்ஸில் ஏற அனுமதி அளித்தனர். ஒவ்வொரு பயணிக்கும் சீட்டில் நம்பர் போடப்பட்டு அந்த சீட் நம்பர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் மட்டுமே அவர்கள் அமர வைக்கப்பட்டனர். இதேபோல இரவு 7 மணிக்கு திருப்பத்தூரில் இருந்து வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி பஸ்கள் இயக்கப்பட்டது.

Next Story