தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைப்பு - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைப்பு - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 18 May 2020 10:45 PM GMT (Updated: 18 May 2020 5:25 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் ஏற்கனவே 28 நபர்கள் பூரண நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். சிகிச்சை பலன் இன்றி 2 பேர் இறந்து உள்ளனர். மீதம் உள்ள 40 பேரில் 30 பேர் மராட்டியம் மற்றும் குஜராத் மாநிலங்களில் இருந்தும், சென்னையில் இருந்தும் தூத்துக்குடிக்கு வந்தவர்கள் ஆவர்.

மற்ற 2 பேர் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 37 பேரும், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 2 பேரும், மதுரையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

9 இடங்கள்

வெளி மாநிலத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருபவர்களுக்கு மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. அவர்கள் அதற்கென ஏற்படுத்தப்பட்டு உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மாவட்டத்தில் 9 இடங்களில் தனிமைப்படுத்தும் முகாம்கள் உள்ளன. இதில் 700 பேர் தங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதி ஆகியவற்றை வழங்கும் பணிகளில் பொது சுகாதாரத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

அரசு பணியாளர்கள்

முதல்-அமைச்சர் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் அலுவலக பணியில் ஈடுபட வசதியாக 11 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காகவும், அவசிய வேலை காரணமாக மட்டும் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

தொழிற்சாலைகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,200 தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் சமூக இடைவெளியை கடைபிடித்து பணியாற்றிட அறிவுரைகளும் வழங்கப்பட்டு உள்ளது. வெளி மாநிலத்தை சேர்ந்த 8 ஆயிரத்து 700 தொழிலாளர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகிறார்கள்.

இதில் பல்வேறு தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்ததின் அடிப்படையில் பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். மீதம் உள்ளவர்களும் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

நோய் கட்டுப்பாட்டு பகுதி

தூத்துக்குடி மாவட்டத்தில் 12 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. இதில் பசுவந்தனை கட்டுப்பாட்டு பகுதியில் கட்டுப்பாடு இன்றுடன் நிறைவடைகிறது. தற்போது 11 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.

பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியில் வரும் போது, முக கவசங்களை அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கி செல்ல வேண்டும். மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story