டெல்லியில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயிலில் 350 பேர் வந்தனர் - கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது
டெல்லியில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயிலில் 350 பேர் வந்தனர். அவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
நெல்லை,
நாடு முழுவதும் வேலை தேடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு நெல்லை மாவட்டத்தில் இருந்து பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு உள்ளன.
இதேபோல் டெல்லியில் தவித்து வரும் தமிழர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு சென்றவர்கள் மற்றும் ஏராளமான தமிழர்களும் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் இருந்து வந்தனர்.
இதையடுத்து அவர்களை தமிழகத்துக்கு அழைத்து வர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. அந்த ரெயில் நேற்று காலை 10 மணி அளவில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. வரும் வழியில் சென்னை, திருச்சி உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் அந்தந்த பகுதியை சேர்ந்தவர்கள் இறக்கி விடப்பட்டனர்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 350 பேர் நெல்லை ரெயில் நிலையத்தில் வந்து இறங்கினர். அவர்கள் மாவட்ட வாரியாக தனித்தனியாக பிரிக்கப்பட்டு, அரசு பஸ்களில் அழைத்து சென்று அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த ரெயிலில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 221 பேர் வந்தனர். இவர்கள் பாளையங்கோட்டை அரசு சித்தா கல்லூரி, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மற்றும் ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில் இவர்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் உடனடியாக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவர். மற்றவர்கள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் அவர்கள் தங்க வைக்கப்பட்ட இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story