பலத்த காற்றுடன் திடீர் மழை
புதுச்சேரியில் நேற்று பலத்த காற்றுடன் திடீரென மழை பெய்தது.
புதுச்சேரி,
வங்க கடலில் கடந்த சில நாட்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியது. அந்த புயலுக்கு ‘உம்பன்’ என பெயரிடப்பட்டது. இந்த புயல் நேற்று வடக்கு, வட கிழக்கு திசையில் நகர்ந்து ஒடிசா அருகே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் காரணமாக புதுவை துறைமுகத்தில் நேற்று முன்தினம் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டது.
புதுச்சேரியில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்தநிலையில் ‘உம்பன்’ புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்தது. மேலும் கடல் கொந்தளிப்பாக இருந்தது. நேற்று மதியம் முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணிக்கு திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சுமார் அரை மணி நேரம் நீடித்தது. பலத்த காற்றுடன் மழை பெய்யத்தொடங்கியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக புதுவையில் பெரும்பாலான இடங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.
புதுவையில் வெப்பம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று பெய்த மழையால் இதமான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.
அரியாங்குப்பம் பகுதியில் நேற்று மாலை திடீரென பலத்த காற்று வீசியது. இதில் மின்சார வயர்கள் ஆங்காங்கே அறுந்து மின்தடை ஏற்பட்டது. மேலும் மின் கம்பமும் சாய்ந்தது.அரியாங்குப்பம் மணவெளி கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த கவிதா என்பவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தது.மேலும் அந்த பகுதியில் உள்ள வாழை மரங்களும் சேதமடைந்தது.
Related Tags :
Next Story