தேனி மாவட்டத்தில் இருந்து உத்தரபிரதேச தொழிலாளர்கள் 180 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
தேனி மாவட்டத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தேனி,
தேனி மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், திரையரங்கம் போன்றவற்றில் கூலித்தொழிலாளர்களாகவும், கரும்பு வெட்டும் பணிக்கான கூலித்தொழிலாளர்களாகவும் அவர்கள் வேலை பார்த்து வந்தனர். மேலும் பலர் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வடமாநில தொழிலாளர்கள் வேலையின்றியும், வருமானம் இன்றியும் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப கோரிக்கை வைத்தனர். அவர்களை சொந்த ஊருக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்க அரசு ஏற்பாடு செய்தது. தேனி மாவட்டத்தில் சுமார் 1,500 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு விருப்பம் தெரிவித்தனர். அதன்படி, முதற்கட்டமாக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
5 பஸ்களில் பயணம்
தேனி தாலுகாவில் இருந்து 96 பேர், போடி தாலுகாவில் 6 பேர், பெரியகுளம் தாலுகாவில் 8 பேர், ஆண்டிப்பட்டி தாலுகாவில் 42 பேர், உத்தமபாளையம் தாலுகாவில் 28 பேர் என மொத்தம் 180 தொழிலாளர்கள் நேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தொழிலாளர்கள் தேனியில் இருந்து மதுரை ரெயில் நிலையத்துக்கு பஸ்கள் மூலமும், மதுரையில் இருந்து சிறப்பு ரெயிலிலும் புறப்பட்டுச் சென்றனர். இதற்காக தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் 5 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.
பெரியகுளம், போடி பகுதியில் வசித்தவர்கள் தேனிக்கு அழைத்து வரப்பட்டனர். தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து 3 பஸ்களிலும், உத்தமபாளையம், ஆண்டிப்பட்டியில் இருந்து தலா ஒரு பஸ்சிலும் அவர்கள் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தேனியில் இருந்து புறப்பட்டுச் சென்ற வடமாநில தொழிலாளர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் முககவசம் போன்றவை வழங்கப்பட்டன. அவர்களை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் நாளை (புதன்கிழமை) தங்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். அதைத் தொடர்ந்து மராட்டிய தொழிலாளர்களும், பிற மாநில தொழிலாளர்களும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இதற் கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
Related Tags :
Next Story