சேலம் மாவட்டத்துக்குள் அரசு பஸ்கள் இயக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் சேலம் மாவட்டத்துக்குள் அரசு பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சேலம்,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் அரசு மற்றும் தனியார் பஸ்களை இயக்குவதற்கு அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் சென்னை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று அரசு ஊழியர்களை அழைத்து செல்ல குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டன.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் நேற்று 90 சதவீதத்திற்கும் மேல் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் பஸ், ஆட்டோ போன்ற வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பலர் சிரமத்திற்கு ஆளாகினர். அதேசமயம் மாவட்டத்திற்குள் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்காக பஸ் இயக்கப்படலாம் என்றும், அதில் 20 பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சேலத்தில் நேற்று பயணிகளுக்காக ஒரு அரசு பஸ் கூட இயக்கப்படவில்லை. ஏற்கனவே சேலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களின் வசதிக்காக 9 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் நேற்று முதல் தனியார் தொழிற்சாலைகள் 100 சதவீதம் செயல்பாட்டுக்கு வந்தாலும் பஸ் வசதி இல்லாத காரணத்தால் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே சேலம் மாவட்டத்துக்குள் அரசு பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதுகுறித்து சூரமங்கலம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சுப்பிரமணி கூறுகையில், அத்தியாவசிய தேவைகளுக்காக மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள், வேன்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் பஸ்கள் இயக்கப்பட்டால் மட்டுமே பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வரவும், தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவும் முடியும். தொழிற்சாலைகள் இயங்கினாலும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியவில்லை. அனைத்து தரப்பு மக்களும் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் என்று அறிவித்துள்ளது. ஆனால் நீண்ட தொலைவில் இருக்கும் ஊழியர்கள் எப்படி அரசு அலுவலங்களுக்கு வேலைக்கு செல்ல முடியும். எனவே சேலம் மாவட்டத்திற்குள் பஸ் போக்குவரத்தை தொடங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
சேலம் களரம்பட்டி சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகம் கூறுகையில், பஸ், ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் இயக்கப்பட்டால் மட்டுமே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும். அன்றாட தினக்கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அனைவரும் பஸ் போக்குவரத்தை நம்பி தான் இருக்கிறார்கள். தற்போது ஊரடங்கு தளர்வு செய்திருந்தாலும் பஸ் வசதி இல்லாததால் அவர்கள் வேலைக்கு செல்ல முடியவில்லை.
நான் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளேன். ஆட்டோ மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் எனது குடும்பத்தை வழிநடத்தி வருகிறேன். ஆனால் ஊரடங்கால் கடந்த 55 நாட்களாக ஆட்டோ இயக்கப்படாமல் உள்ளதால் எனது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் படிப்படியாக பஸ் மற்றும் ஆட்டோ போக்கு வரத்தை தொடங்குவதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும், என்றார்.
அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் கூறியதாவது:-
அரசு உத்தரவுபடி அரசு ஊழியர்களை பணிக்கு அழைத்துச் செல்ல பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்தெந்த வழித்தடத்தில் எத்தனை பஸ்கள் தேவை? என்பதை கலெக்டர் அலுவலகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பட்டியல் எடுத்து தர உள்ளனர். அவ்வாறு அதிகாரிகள் கொடுக்கும் பட்டியலின் அடிப்படையில் அரசு பஸ்கள் நாளை (அதாவது இன்று) முதல் இயங்கும் என எதிர்பார்க்கிறோம்.
சேலம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் மாவட்டத்தில் 1,047 பஸ்களும், தர்மபுரி மாவட்டத்தில் 843 பஸ்களும் உள்ளன. ஆனால் தமிழக அரசு அறிவித்தால் மட்டுமே குறைந்த அளவு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும் அனைத்து பணிமனைகளிலும் பஸ்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் எந்த நேரத்திலும் பணிக்கு திரும்புமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பணிமனைகளில் கடந்த 55 நாட்களாக அரசு பஸ்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது எந்த நேரத்திலும் பஸ்கள் சேவை தொடங்கும் என்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு பஸ்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது..
Related Tags :
Next Story