திருப்பூரில் பொதுமக்கள் முககவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் மாநகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்பு


திருப்பூரில்  பொதுமக்கள் முககவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம்  மாநகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்பு
x
தினத்தந்தி 19 May 2020 2:21 AM GMT (Updated: 19 May 2020 2:21 AM GMT)

முக கவசம் இன்றி வெளியே வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

அனுப்பர்பாளையம், 

திருப்பூரில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரத்தொடங்கி உள்ளதையடுத்து ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு நிபந்தனைகளுடன் கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதால் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களும் அதிக அளவில் வெளியே வரத் தொடங்கி உள்ளதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால், அதை கட்டுப்படுத்த பொதுமக்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி சார்பில் ஆட்டோவில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வை ஊழியர்கள் ஏற்படுத்தி வருகின்றனர்.

அபராதம்

மேலும் முககவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும். கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக கிருமி நாசினி வழங்குவதுடன், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதை பின்பற்றாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுவதுடன், கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் ஒலிபெருக்கி மூலமாக திருப்பூர் முழுவதும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

Next Story