விருத்தாசலம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை: மரம், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன


விருத்தாசலம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை: மரம், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன
x
தினத்தந்தி 19 May 2020 3:26 AM GMT (Updated: 19 May 2020 3:26 AM GMT)

விருத்தாசலம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் மரம், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.


விருத்தாசலம், 

வங்கக்கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருவானது. இதற்கு உம்பன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பெண்ணாடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை 7 மணியளவில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் வெண்கரும்பூர் கிராமத்தில் உள்ள இலுப்பைத் தோப்பு பகுதியில் பழமை வாய்ந்த இலுப்பை மரம் வேரோடு சாய்ந்து அங்கிருந்த அருண் மற்றும் செல்வமணி ஆகியோரது வீட்டின் மீது விழுந்தது.

இதில் அருண் வீடு முழுமையாக சேதம் அடைந்தது. மேலும் செல்வமணி வீட்டில் சுவர் இடிந்து சேதமானதுடன், அங்கிருந்த மின்கம்பம் ஒன்றும் முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதேபோல் ஸ்ரீமுஷ்ணத்தில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை செய்தது. இந்த மழை சுமார் 30 நிமிடம் நீடித்தது. இதனால் வெப்பம் தணிந்து அந்த பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

விருத்தாசலத்தில் மாலை 5.15 மணியளவில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. பெரியகண்டியாங்குப்பத்தில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதன் காரணமாக விருத்தாசலம் பகுதியில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு 11 மணியை கடந்தும் மின்வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் போலீசார் அகற்றினர்.

கடலூரை பொறுத்தவரை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ஏற்கனவே மீன்பிடி தடைகாலம் இருப்பதால் விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். அதே நேரத்தில் கரையோர பகுதியில் கட்டுமரங்களில் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களும் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அக்னி நட்சத்திரத்தால் வெயில் வாட்டி வரும் நிலையில், இந்த திடீர் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

Related Tags :
Next Story