எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு முன்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களை தயார்படுத்த வேண்டும் கல்வியாளர்கள் கருத்து
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டாமல் நோய்த்தொற்று குறைந்த பின்பு 2 வாரங்கள் வகுப்புகள் நடத்தி மாணவ-மாணவிகளை மனதளவில் தயார்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விருதுநகர்,
மாணவர் பயிற்சியில் அனுபவம் உள்ள கல்வியாளர்கள் தெரிவித்ததாவது:-
மன ரீதியான பாதிப்பு
தமிழக அரசு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளது. கொரோனா தொற்று ஜூன் மாதம் உச்சத்தை எட்டும் என மருத்துவ ஆய்வாளர்கள் கூறும் நிலையில் பொதுத்தேர்வினை அந்த காலகட்டத்தில் நடத்துவது என்பது மாணவ-மாணவிகளுக்கும் பெற்றோருக்கும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் ஊரடங்கு காலத்தில் இந்த மாதம் இறுதிவரை பொதுபோக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள மாணவ-மாணவிகள் ஊர் திரும்புவது என்பது இயலாத காரியம். எனினும் பல்வேறு தடைகளை தாண்டி அவர்கள் ஊர் திரும்பினாலும் அவர்கள் தேர்வு எழுதும் மன நிலையில் இருக்க வாய்ப்பில்லை.
வகுப்புகள்
கொரோனா தொற்று பரவல் குறைந்த பின்பு 2 வாரங்கள் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளை பள்ளிகளுக்கு வரவழைத்து வகுப்புகள் நடத்தி மனதளவில் அவர்களை தயார் படுத்த வேண்டும். அப்போது தான் அவர்கள் அச்சமின்றி மனதில் சஞ்சலம் ஏதும் இல்லாமல் முழு கவனத்துடன் தேர்வு எழுத வாய்ப்பு ஏற்படும்.
பரிசீலிக்க வேண்டும்
பொதுத்தேர்வு நடத்துவது என்பது அவசியமான ஒன்றுதான். தொடரும் நோய் பாதிப்பு அதற்கு வாய்ப்பளிக்காவிட்டால் இந்த கல்வியாண்டியில் நடத்தப்பட்ட காலாண்டு அரையாண்டு தேர்வுகள் மற்றும் திருப்பு தேர்வுகளில் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி நிலையை அறிவிப்பது குறித்து பள்ளி கல்வித்துறை பரிசீலிக்கலாம்.
மேலை நாடுகளில் கூட அசாதரமான சூழ்நிலைகளில் பொதுத்தேர்வுகளை ரத்து செய்துவிட்டு இம்மாதிரியான தேர்ச்சி முறைகள் கையாளப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு கவசம் அளிக்கப்படும் என உறுதியளிக்கப்படும் நிலையில் தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகள் குறித்து அரசு கவலை கொள்ளாதது வேதனையளிக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story