ஈரோட்டில் வடமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம்


ஈரோட்டில் வடமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 19 May 2020 11:28 AM IST (Updated: 19 May 2020 11:28 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் வடமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.


ஈரோடு, 

ஈரோடு மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலமாக மாறி உள்ளது. இந்த சூழலில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகளிலும் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்து உள்ளனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை வட மாநில தொழிலாளர்கள் யாரும், ரெயில் அல்லது பஸ் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

சுமார் 9 ஆயிரம் பேரிடம் இருந்து ஊர் திரும்புவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இந்தநிலையில் நேற்று கருங்கல்பாளையம், வைராபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாய-சலவை பட்டறைகளில் வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளர்கள் பலர் வைராபாளையம் நீரேற்று நிலைய ரோட்டில் கூடினார்கள். அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக விண்ணப்பம் செய்ய கலெக்டர் அலுவலகம் நோக்கி புறப்பட்டனர்.

வடமாநில தொழிலாளர்கள் ஊர்வலம் போன்று புறப்பட்டு நீரேற்று நிலையம் ரோட்டில் நடந்து வந்து கொண்டு இருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் கும்பலாக புறப்பட்ட வடமாநில தொழிலாளர்களை தடுத்து விவரம் கேட்டனர். அதற்கு, கடந்த 2 மாதங்களாக இங்கு வேலை வாய்ப்பு இல்லை. உடனடியாக வேலை கிடைக்கும் வாய்ப்பு இல்லை. எனவே நாங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்கிறோம் என்றார்கள்.

போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது தொழிலாளர்கள் பெரும்பாலும் பீகார் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து உங்களின் கோரிக்கையை கலெக்டரிடம் தெரிவித்து உரிய தீர்வு காணப்படும். தற்போது யாரும் கலெக்டர் அலுவலகம் செல்ல வேண்டாம், கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனால், வடமாநில தொழிலாளர்கள் அதை கேட்கவில்லை. அவர்கள் திடீர் என்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் தடுத்தும் கேட்காததால், தொழிலாளர்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள். போலீசாரின் திடீர் தாக்குதலை கண்டு வடமாநில தொழிலாளர்கள் நாலா புறமும் சிதறி ஓடினர்.

இதற்கிடையே தகவல் அறிந்து ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் தொழிலாளர்களை மீண்டும் அழைத்து அவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் ஆலை உரிமையாளர்களுடன் பேசி உரிய தீர்வு காணப்படும். சொந்த மாநிலம் செல்ல விரும்புபவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறினார். அதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story