அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: சென்னையில் 758 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பு


அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: சென்னையில் 758 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பு
x
தினத்தந்தி 19 May 2020 11:45 PM GMT (Updated: 19 May 2020 7:29 PM GMT)

சென்னையில் 758 இடங்களை கட்டுப்பாட்டு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடங்களை தனிமைப்படுத்தி, அந்த பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு பகுதியில் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அதைப்போல் அந்த பகுதியில் உள்ளவர்கள் யாரும் வெளியே செல்லவும் அனுமதி இல்லை.

தமிழகத்தில் சென்னையில்தான் அதிக பாதிப்பு இருந்து வருகிறது. சென்னையில் நேற்று புதிதாக 552 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 672 ஆக உயர்ந்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ராயபுரம் மண்டலத்தில் அதிக பாதிப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் 758 இடங்கள் கொரோனா கட்டுபாட்டு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 130 இடங்களும், திரு.வி.க. நகர் மண்டலத்தில் 121 இடங் களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 80 மற்றும் அம்பத்தூர் மண்டலத்தில் 77 இடங்களும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் மாதவரம் மண்டலத்தில் 59, கோடம்பாக்கம் மண்டலத்தில் 54, மணலி மண்டலத்தில் 46, திருவொற்றியூர் மண்டலத்தில் 32, வளசரவாக்கம் மண்டலத்தில் 32, தண்டையார்பேட்டை மண்டலத்தில் 29, அடையாறு மண்டலத்தில் 22, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 22, அண்ணாநகர் மண்டலத்தில் 21, பெருங்குடி மண்டலத்தில் 17, ஆலந்தூர் மண்டலத்தில் 16 என மொத்தம் 758 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story