கும்மிடிப்பூண்டி அருகே வடமாநில தொழிலாளி பிணம் - ஊரடங்கால் நடந்து செல்லும்போது இறந்தாரா?
கும்மிடிப்பூண்டி அருகே வடமாநில தொழிலாளி பிணமாக கிடந்தார். அவர் ஊரடங்கு காரணமாக நடந்து செல்லும்போது இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டையில் இருந்து சத்யவேடு செல்லும் சாலையில் நேற்று காலை ஆண் ஒருவரின் பிணம் கிடப்பதாக கீழ்முதலம்பேடு கிராம நிர்வாக அதிகாரி ராஜா, கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சாலையோரம் இறந்து கிடந்த நபர், ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டம் லட்சிபேடா அருகே உள்ள பூபன்பலி கிராமத்தை சேர்ந்த ராம் பிஸ்வாஸ் (வயது 44) என்பது அவரது ஆதார் அட்டை மூலம் உறுதியானது.
அவரது துணி பையில் இருந்து ஒரு போன் புத்தகத்தை கண்டெடுத்த போலீசார், அதில் இருந்த உறவினர்களின் தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ராம் பிஸ்வாஸ் உடலை அவரது உறவினர்கள் நேரில் வந்து பெற்றுக்கொள்வதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
சாலையோரம் பிணமாக கிடந்த வடமாநில தொழிலாளி சென்னை அல்லது புறநகர் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்தவராக இருக்கலாம் என்றும் ஊரடங்கு காரணமாக கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திராவை கடந்து ஒடிசா செல்ல அவர் திட்டமிட்டு இருந்திருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர்.
அவர் ஒடிசாவுக்கு நடந்து செல்லும்போது பசி மயக்கத்தில் இறந்தாரா? அல்லது மாரடைப்பு காரணமாக இறந்தாரா? என்பது தெரியவில்லை. சாலையோரம் பிணமாக கிடந்தவர் எங்கிருந்து வந்தார்? எங்கு வேலை செய்தார்? என்கிற விவரங்கள் ஒடிசாவில் இருந்து அவரது உறவினர்கள் வந்தால் தான் முழுமையாக தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். ராம் பிஸ்வாஸ் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story