உடுமலையில் இருந்து அரசு அலுவலக ஊழியர்களுக்காக திருப்பூருக்கு பஸ் இயக்கம் அடையாள அட்டைகளை காட்டிய பின் அனுமதிக்கப்பட்டனர்
உடுமலையில் இருந்து அரசு ஊழியர்களுக்காக திருப்பூருக்கு ஒரு அரசுபஸ் இயக்கப்பட்டது. அரசு ஊழியர்கள் அடையாள அட்டையை காட்டியபிறகே பஸ்சில் அனுமதிக்கப்பட்டனர்.
உடுமலை,
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கினால் பஸ்போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 31 -ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஊரடங்கில் அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
அதன்படி அரசு அலுவலகங்கள் நேற்று முன்தினம் முதல் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட தொடங்கியுள்ளது. உடுமலையில் குடியிருக்கும் அரசு ஊழியர்கள் திருப்பூரில் உள்ள அரசு அலுவலகங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தினசரி உடுமலையில் இருந்து பஸ்சில் திருப்பூருக்கு பணிக்கு சென்று வருவது வழக்கம்.
5 ஊர்களில் இருந்து...
இந்த நிலையில் ஊரடங்கால் பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படலாம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில்,நேற்று முன்தினம் பஸ் இயக்கப்படாத நிலையில் அரசு ஊழியர்கள் சிலர் இருசக்கர வாகனத்திலேயே திருப்பூருக்கு பணிக்கு சென்று வந்தனர்.
இந்த நிலை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மற்ற ஊர்களிலும் இருந்தது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலக ஊழியர்கள் பணிக்கு சென்று வருவதற்கு வசதியாக நேற்று முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் உடுமலை, அவினாசி, தாராபுரம், காங்கேயம், பெருந்துறை ஆகிய 5 ஊர்களில் இருந்து காலையில் தலா ஒரு பஸ் திருப்பூருக்கு இயக்கப்படும் என்றும், அந்த பஸ்கள் திருப்பூரில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு அந்தந்த ஊர்களுக்கு செல்லும் என்றும் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவித்திருந்தார்.
20 அரசு ஊழியர்கள்
அதன்படி உடுமலையில் நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக டெப்போவில், பஸ்சுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மத்திய பஸ்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பஸ்சுக்காக முககவசம் அணிந்த நிலையில் அரசு ஊழியர்கள் காத்திருந்தனர். அவர்கள் அரசு ஊழியர் என்பதற்கான அடையாள அட்டையை காட்டியபிறகு அவர்கள் கைகளை கழுவுவதற்காக சானிடைசர் வழங்கப்பட்டது.
அதன் பிறகே அரசு ஊழியர்கள் பஸ்சுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து பஸ்சுக்குள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரு இருக்கைக்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 20 அரசு ஊழியர்கள் மட்டுமே பஸ்சில் இருந்தனர். அவர்களிடம், உடுமலையில் இருந்து திருப்பூருக்கு செல்லும் இடைநில்லா பஸ்கட்டணமாக ரூ.52 வசூலிக்கப்பட்டது. உடுமலையில் இந்த பணிகள் அனைத்தையும்,அரசின் உத்தரவுப்படியும், மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்படியும் உடுமலை கிளை அரசு போக்குவரத்துக்கழக அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story