இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 May 2020 6:44 AM IST (Updated: 20 May 2020 6:44 AM IST)
t-max-icont-min-icon

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணம் கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


நாமக்கல், 

உடல் உழைப்பு தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கிடவும், நகர்ப்புற மக்களுக்கு தனியாக வேலை உறுதியளிப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுடன், சிறு,குறு தொழில்கள், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வில்லை என்று கூறி, அரசுகளை கண்டித்தும் திருச்செங்கோடு நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு நேற்று காலையில் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் எஸ்.மணிவேல் தலைமை தாங்கி பேசினார். இதில் நகர நிர்வாகிகள் செல்வராஜ், கிருஷ்ணசாமி, ராமகிருஷ்ணன், தங்கராசு, சுகுமார், முருகேசன், கோபிராஜ், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் குழந்தான் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தம்பிராஜா முன்னிலை வகித்தார். இதில் போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில செயலாளர் முருகராஜ், மாவட்ட குழு உறுப்பினர் ரவீந்திரன், நகர பொருளாளர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குமாரபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் எஸ்.பி. கேசவன் தலைமை தாங்கினார். பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் அர்த்தனாரி முன்னிலை வகித்தார். இதில் ஏ.ஐ.டி.யு.சி. உறுப்பினர்களும், அனைத்து இளைஞர் பெருமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களின் போது தொழிலாளர்கள் அனைவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். நகர்ப்புற மக்களுக்கு தனியாக வேலை உறுதியளிப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதேகோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ராசிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். இதில் நகர துணை செயலாளர் சரவணன், நகர பொருளாளர் சலீம், நகர உதவி செயலாளர் சாதிக், நகர செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, வெண்ணந்தூர் ஒன்றிய துணை செயலாளர் செங்கோட்டுவேல், நாமக்கல் மாவட்ட குழு உறுப்பினர் மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story