இலங்கையில் இருந்து 700 இந்தியர்களுடன் 1-ந் தேதி தூத்துக்குடி வரும் கடற்படை கப்பல் - கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு
இலங்கையில் சிக்கி தவிக்கும் 700 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு கடற்படை கப்பல் வருகிற 1-ந்தேதி தூத்துக்குடிக்கு வருகிறது. அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆகையால் அங்கு தொழில்கள் முடங்கி உள்ளன. இந்தியாவை சேர்ந்தவர்கள் பலர் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். அதே போன்று சுற்றுலாவுக்கும் சென்று வருகின்றனர்.
அவ்வாறு சுற்றுலா சென்றவர்கள், பணியாற்றும் தொழிலாளர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக மத்திய அரசு ‘வந்தே பாரத்‘ இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன்மூலம் பல்வேறு நாடுகளில் சிக்கி தவித்து வரும் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இலங்கையில் தவித்து வரும் இந்தியர்கள் சுமார் 1,200 பேர் இந்தியாவுக்கு திரும்புவதற்காக இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்து உள்ளனர். அவர்களை மீட்டு வருவதற்காக வருகிற 29-ந் தேதி ஒரு விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில் 169 பேர் மும்பை வருகின்றனர்.
அதேபோல் வருகிற ஜூன் மாதம் 1-ந்தேதி ‘ஆபரேசன் சமுத்திர சேது‘ திட்டத்தின்படி இந்திய கடற்படை கப்பல் ‘ஐ.என்.எஸ்.ஜலஸ்வா‘ இலங்கையில் இருந்து சுமார் 700 பேரை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வருகிறது.
இதனால் வ.உ.சி. துறைமுகத்தில் உள்ள பயணிகள் முனையத்தை தயார் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. அங்கு குடியுரிமை அதிகாரிகள் பாதுகாப்பான முறையில் சோதனை செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த கப்பல் வ.உ.சி. துறைமுகத்தில் உள்ள வடக்கு சரக்கு கரித்தளத்துக்கு வருகிறது. அங்கிருந்து பயணிகள் வேன் மூலம் முனையத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர். அங்கு கொரோனா பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் முடிக்கப்பட்ட பிறகு, அவர்களை சொந்த மாவட்டம், சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story