ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள்
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
திருச்செந்தூர்,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்களை வழங்கி உதவி வருகின்றனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களை அனுமதிக்காததால், அர்ச்சகர்கள் வருமானமின்றி வறுமையில் வாடுகின்றனர். இதையடுத்து திருச்செந்தூரில் வறுமையில் வாடும் அர்ச்சகர்கள் 550 பேருக்கு சிருங்கேரி சாரதா பீடம் மடம் சார்பில், தலா 10 கிலோ அரிசி, மளிகை பொருட்களை கோவில் செயல் அலுவலர் அம்ரித் வழங்கினார். நகர கூட்டுறவு வங்கி தலைவர் கோட்டை மணிகண்டன், கோவில் விதாயகர்த்தா சிவசாமி சாஸ்திரி, சிருங்கேரி மடம் கிளை பொறுப்பாளர் பசு கணபதி சங்கர், மேலாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூரில் பா.ஜனதா சார்பில், தினமும் 100 ஏழைகளுக்கு உணவு பொட்டலம் வழங்கப்படுகிறது. இதன் 50-வது நாள் நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் தலைமை தாங்கி, ஏழைகளுக்கு உணவு பொட்டலம் வழங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் நெல்லையம்மாள், ஒன்றிய தலைவர் திருநாவுக்கரசு, நகர செயலாளர் மகாராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசாருக்கு வழங்கிடும் வகையில், காயாமொழி தேசிக அறக்கட்டளை நிறுவன தலைவர் குமரகுருபர ஆதித்தன் 2,500 முக கவசம், 650 சோப்பு ஆகியவற்றை திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஞானராஜிடம் வழங்கினார்.
கோவில்பட்டி கடலைக்கார தெருவில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில், 100 ஏழைகளுக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது. வார்டு செயலாளர் மணிகண்டன், நகர செயலாளர் மகேஷ் பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டியை அடுத்த மேல பாண்டவர்மங்கலம், துரைச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் 50 ஏழைகளுக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறிகளை பா.ஜனதா சார்பில் ஒன்றிய தலைவர் மாரிமுத்து வழங்கினார்.
உடன்குடி அருகே வேப்பங்காட்டில் 275 ஏழைகளுக்கு பா.ஜ.க. சார்பில் மாநில வர்த்தக அணி தலைவர் ராஜ கண்ணன் தலா 10 கிலோ அரிசி வழங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் பிரபு, ஒன்றிய பொதுச்செயலாளர் சிவந்திவேல், இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் பரமேசுவரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
உடன்குடி வில்லிகுடியிருப்பில் தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பில், 152 ஏழைகளுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா, தொழில் அதிபர் சந்திரசேகரன் ஆகியோர் வழங்கினர். நுகர்வோர் பேரவை தலைவர் மோகனசுந்தரம், சட்ட ஆலோசகர் வக்கீல் சாத்ராக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
உடன்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்க பேரவை சார்பில், 140 ஏழைகளுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை முற்போக்கு மாணவர் கழக மாநில துணை செயலாளர் தர்மராஜ் வழங்கினார். சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்பரிதி, ஒன்றிய அமைப்பாளர் ராம்குமார், ஒன்றிய பொருளாளர் ஜான் வளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் அருகே பள்ளிப்பத்து பஞ்சாயத்து மாலைகுட்டியான்விளை, எழும்படிவட்டம் ஆகிய கிராமங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் 55 ஏழைகளுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கினார். மாநில கருத்தியல் பரப்பு துணை செயலாளர் தமிழ்குட்டி, மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story