சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தேசிய தொற்றுநோய் நிறுவன குழுவினர் ஆய்வு


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தேசிய தொற்றுநோய் நிறுவன குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 21 May 2020 5:00 AM IST (Updated: 21 May 2020 1:39 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தேசிய தொற்றுநோய் நிறுவன குழுவினர் நேற்று ஆய்வில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து அனைத்து கடைகளிலும் உயர்ரக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

சென்னை, 

சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலம் தமிழகம் முழுவதும் 1,500க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவியது. இதைத்தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. காய்கறி சந்தை, திருமழிசை துணைக்கோள் நகரத்துக்கும், பூ மற்றும் பழ சந்தை மாதவரம் பஸ் நிலைய வளாகத்துக்கும் மாற்றப்பட்டது.

இந்தநிலையில் கோயம்பேடு மார்க்கெட்டின் தற்போதைய நிலை குறித்தும், கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பார்வையிடுவதற்காக மத்திய அரசின் தேசிய தொற்றுநோய் நிறுவனத்தின் இயக்குனரும், கொரோனா தேசிய பணிக்குழு உறுப்பினருமான டாக்டர் மனோஜ் முரேக்கர் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு நேற்று கோயம்பேட்டுக்கு வந்தனர். கோயம்பேடு மார்க்கெட் முழுவதும் நடைபெறும் துப்புரவு மற்றும் சுகாதார பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து கொரோனா தாக்கம் அதிகம் நிறைந்த கோடம்பாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக, கோயம்பேடு காய், கனி மற்றும் மலர் அங்காடிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் உயர்ரக கிருமிநாசினி தெளிக்க மத்திய குழுவினர் ஆலோசனை வழங்கினர். அதனைத்தொடர்ந்து அனைத்து கடைகளுக்கும் ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்தப்படும் பாராசிட்ரிக் ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் உயர்ரக கிருமிநாசினியான சிட்ரமைடு குளோராக்சைடு ஆகியவை 3 அடுக்குகளாக தெளிக்கப்பட்டன. மேலும் மார்க்கெட் வளாகம் மற்றும் சுற்றுச்சுவர் பகுதிகள் அனைத்தும் பிளச்சிங் பவுடர் தூவப்பட்டு வருகிறது.

அதேவேளை தேவையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு மீண்டும் கோயம்பேடு மார்க்கெட் முன்புபோல செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசு விதிக்கும் வழிமுறைகளை பின்பற்ற தயாராக இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் அண்ணா அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கத்தின் தலைவர் கே.ஜெயராமன் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் காரணமாக கோயம்பேடு வியாபாரிகள் நாங்கள் அகதிகளாகி விட்டோம். கடன் வாங்கியும், வீட்டை அடமானம் வைத்தும் காய்கறி, பூ, பழ விற்பனையில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இப்போது மாற்று இடங்களில் சந்தை அமைக்கப்பட்டாலும், குறிப்பிட்ட வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்துள்ளோம்.

எனவே அனைத்துவிதமான சுகாதார நடவடிக்கைகளையும் மேற்கொண்டு கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் கடைகள் செயல்பட அனுமதி வழங்கவேண்டும். அதற்காக அரசு விதிக்கும் எல்லா வழிமுறைகளையும் பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்க வியாபாரிகளான நாங்கள் தயாராகவே இருக்கிறோம். பொதுமக்களை சமூக இடைவெளியை கடைப்பிடிக்க செய்வதில் முழுமூச்சாக செயல்படுகிறோம். பாதுகாப்பு உபகரணங்களையும், வழிமுறைகளை பின்பற்ற தயாராக இருக்கிறோம். எனவே வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் நலன் காக்க அரசு நல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story