திருப்பூர் மாவட்டத்தில் காசநோய் கண்டறியும் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


திருப்பூர் மாவட்டத்தில்   காசநோய் கண்டறியும் நடமாடும் எக்ஸ்ரே வாகனம்   கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 May 2020 11:03 PM GMT (Updated: 20 May 2020 11:03 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் காசநோய் கண்டறியும் நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தை கலெக்டர் விஜயகார்த்திகேயன் தொடங்கிவைத்தார்.

திருப்பூர், 

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்த்துறை சார்பில் காசநோய் கண்டறியும் வகையில் 14 எக்ஸ்ரே நடமாடும் வாகனத்தை முதல்-அமைச்சர் சென்னையில் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்துக்கான நடமாடும் காசநோய் கண்டறியும் எக்ஸ்ரே வாகனத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கலெக்டர் விஜயகார்த்திகேயன் இந்த வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த வாகனத்தில் எக்ஸ்ரே நவீன கருவி, ஜெனரேட்டர், கணினி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காசநோய் அறிகுறி உள்ள வயதானவர்கள் திருப்பூர் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து எக்ஸ்ரே செய்ய முடியாத நிலை உள்ளது.

இனி இந்த வாகனத்தின் மூலமாக மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு பகுதிக்கு சென்று காசநோய் அறிகுறி உள்ளவர்களை வாகனத்தில் ஏற்றி எக்ஸ்ரே செய்து அறிகுறிகள் தென்பட்டால் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி உறுதி செய்யப்படும்.

உடனடியாக சிகிச்சை

இதன்காரணமாக எக்ஸ்ரே செய்ய முடியாதவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்துக்கு தேடிச்சென்று இந்த நடமாடும் வாகனத்தின் உதவியோடு எக்ஸ்ரே எடுக்கப்பட உள்ளது. இதன் மூலமாக 2 நாட்களில் காசநோய் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வசதியாக அமைந்துள்ளது. மாவட்டம் முழுவதும் 1 மாதம் இந்த நடமாடும் வாகனம் மூலமாக எக்ஸ்ரே சோதனை நடைபெற இருக்கிறது. இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி டீன் வள்ளி, இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) சாந்தி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஷ்குமார், துணை இயக்குனர்(காசநோய்) தீனதயாளன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story