கோவையில் இருந்து 3 ரெயில்கள் இயக்கம்: வடமாநில தொழிலாளர்கள் 4 ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு


கோவையில் இருந்து 3 ரெயில்கள் இயக்கம்:  வடமாநில தொழிலாளர்கள் 4 ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 21 May 2020 5:59 AM IST (Updated: 21 May 2020 5:59 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் இருந்து 3 சிறப்பு ரெயில்கள் மூலம் வடமாநில தொழிலாளர்கள் 4 ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோவை,

கோவை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை, ஓட்டல்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் சுமார் ஒரு லட்சம் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரெயில் மூலம் சொந்த ஊர் திரும்பி வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பீகார், உத்தரபிரதேசம், ஒடிசா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

கோவையில் இருந்து நேற்று ஒரே நாளில் பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசத்துக்கு 3 ரெயில்கள் இயக்கப்பட்டன. அதில் சுமார் 4 ஆயிரம் பேர் புறப்பட்டு சென்றனர். கோவை மாவட்டத்தில் இருந்து இதுவரை 16 சிறப்பு ரெயில்களில் 21 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஒடிசா, மேற்கு வங்காளத்துக்கு ரெயில்கள் நிறுத்தம்

தற்போது ஆம்பன் புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு சகஜ நிலைமை திரும்பிய பின்னர் வடமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து அந்த மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story