பண்ருட்டி அருகே சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டி கொல்ல முயற்சி


பண்ருட்டி அருகே சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டி கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 21 May 2020 10:41 AM IST (Updated: 21 May 2020 10:41 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி, 

பண்ருட்டி அடுத்துள்ள சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் ரஜினிகாந்த் (வயது 40). விவசாயி. இவர் நேற்று காலை அங்குள்ள தனது முந்திரி தோப்புக்கு முந்திரி கொட்டைகள் பொறுக்குவதற்காக சென்றார். அப்போது அங்கு அதே ஊரைச் சேர்ந்த தேவநாதன் மகன் சக்தி என்ற சாமிநாதன் (28), மாசிலாமணி மகன் சசி என்கிற சசிகுமார் (27), செந்தில்வேலன் மகன் மேகநாதன் (32) ஆகியோர் முந்திரி தோப்புக்குள் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. 

இதை பார்த்த ரஜினிகாந்த், இங்கே மது குடிக்க கூடாது என்று அவர்களை கண்டித்து வெளியே போகுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து ரஜினிகாந்தை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், சத்திரம் சந்திப்பில் நின்று கொண்டிருந்த சக்தி, சசி, மேகநாதன் ஆகியோரை சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்ய முயன்றனர். 

அப்போது, அவரை 3 பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றனர். உடனே போலீசார் சாமர்த்தியமாக செயல்பட்டு 3 பேரையும் மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமாரும் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக்தி உள்பட 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story