மீன்பிடி தடைகாலம் எதிரொலி: சென்னையில் மீன்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு


மீன்பிடி தடைகாலம் எதிரொலி: சென்னையில் மீன்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு
x
தினத்தந்தி 21 May 2020 11:30 PM GMT (Updated: 21 May 2020 8:22 PM GMT)

மீன்பிடி தடைகாலம் எதிரொலியால் சென்னையில் மீன்கள் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1,000-க்கு விற்பனை ஆகிறது.

சென்னை, 

தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கியது. இந்த தடை அடுத்த மாதம்(ஜூன்) 14-ந்தேதி வரை அமலில் இருக்கும். இதனால் ஆந்திரா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை நடக்கிறது. எனவே மீன்கள் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.

இதுதொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை மீன் வியாபாரி இளையராஜா கூறியதாவது:-

மீன்பிடி தடைகாலத்தால் மீன் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக மீன்கள் விலை 30 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ரூ.100-க்கு விற்பனையான சங்கரா மீன் ஒரு கிலோ ரூ.300 ஆகவும், ரூ.600-க்கு விற்ற வஞ்சிரம் மீன்(பெரியது) ரூ.1,000 ஆகவும், ரூ.400-க்கு கிடைத்த வஞ்சிரம் மீன்(சிறியது) ரூ.700 ஆகவும் அதிகரித்து உள்ளது. நெத்திலி உள்பட மீன் வகைகள் வரத்து இல்லை.

ரூ.150-க்கு விற்ற கடல் நண்டு ரூ.300-க்கும், இரால் ரூ.300-க்கும் விற்பனை ஆகிறது. சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் மூடப்பட்டு உள்ளதால், ‘ஆர்டர்’ மூலம் சிறிய வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் நேரில் சென்று மீன்களை விற்பனை செய்து வருகிறோம். சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் எப்போது திறக்க அனுமதி கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மீன், மட்டன், சிக்கன் என அசைவ உணவு பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால், சைவ உணவுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி உள்ளனர்.

Next Story