மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்கும் விஷயத்தில் நாடு முழுமைக்கும் ஒரே மாதிரி உத்தரவு பிறப்பிப்பது சரியல்ல முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு


மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்கும் விஷயத்தில் நாடு முழுமைக்கும் ஒரே மாதிரி உத்தரவு பிறப்பிப்பது சரியல்ல முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு
x
தினத்தந்தி 21 May 2020 10:30 PM GMT (Updated: 21 May 2020 8:42 PM GMT)

மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்கும் விஷயத்தில் நாடு முழுமைக்கும் ஒரே மாதிரி உத்தரவு பிறப்பிப்பது சரியல்ல என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு,

மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்கும் நோக்கத்தில் கஸ்தூரிரங்கன் அறிக்கை மத்திய அரசிடம் வழங்கப்பட்டது. இதில் மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றிலும் பாதுகாக்கப்பட்ட பகுதி வரையறுக்கப்பட்டு, அந்த பகுதியில் எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது, குடியிருக்கும் மக்களும் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டது. இதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய வனம், சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் இருந்தபடி முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் எடியூரப்பா பேசியதாவது:-

கஸ்தூரிரங்கன் அறிக்கை குறித்து மாவட்ட, தாலுகா, கிராம பஞ்சாயத்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன். தற்போது உள்ள வடிவத்தில் கஸ்தூரிரங்கன் அறிக்கையை அமல்படுத்துவதை நிராகரித்துள்ளோம். அதிலும் பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதி என்று அறிவித்துள்ளதை ஏற்க முடியாது.

ஒவ்வொரு மாநிலத்தின் பிரச்சினைகள், சவால்கள் வெவ்வேறாக உள்ளது. அதனால் நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான உத்தரவை அமல்படுத்துவது சரியல்ல. அதனால் கஸ்தூரிரங்கன் அறிக்கையில் கர்நாடக அரசு கூறும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

அப்போது பேசிய பிரகாஷ் ஜவடேகர், “நீங்கள் கூறுவது சரியானது தான். ஒவ்வொரு மாநிலத்தின் பிரச்சினையையும் பரிசீலித்து அதற்கேற்ப முடிவு எடுக்கப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கர்நாடக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆனந்த்சிங், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், வனம், சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப்தவே, மராட்டியம், கேரளா, கோவா, தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநில முதல்-மந்திரிகள், அதிகாரிகள் அவரவர் மாநிலங்களில் இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story