அரசு பணியாளர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் - கலெக்டர் தகவல்


அரசு பணியாளர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 22 May 2020 5:00 AM IST (Updated: 22 May 2020 2:58 AM IST)
t-max-icont-min-icon

அரசு பணியாளர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம்,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுத்திட அரசு பிறப்பித்துள்ள 4-ம் கட்ட ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து அரசு அலுவலகங்கள் கடந்த 18-ந்தேதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு பணியாளர்களின் போக்குவரத்து வசதிக்காக காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காலை 8 மணிக்கும், மாலை 6 மணிக்கும் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், பூந்தமல்லி, தாம்பரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர் போன்ற வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

மேலும் காலை 8 மணிக்கும், மாலை 6 மணிக்கும் குன்றத்தூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கும், தாம்பரத்தில் இருந்து படப்பை வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதே போன்று காலை 9 மணிக்கும், இரவு 7 மணிக்கும் பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கும், செங்கல்பட்டில் இருந்து வாலாஜாபாத் வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story