தனியார் மயமாக்க எதிர்ப்பு: மின்துறை தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
யூனியன் பிரதேசங்களில் மின்சாரம் வினியோகம் தனியார் மயமாக்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
புதுச்சேரி,
மின்துறை ஊழியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை இது ஏற்படுத்தி உள்ளது. எனவே மின் வினியோகத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்தனர். இதையொட்டி புதுச்சேரி மின்துறையை தனியார்மய எதிர்ப்பு போராட்டக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டக்குழு சார்பில் புதுவை வம்பாகீரபாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டக்குழு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வேல்முருகன், பொருளாளர் மதிவாணன், துணைத்தலைவர்கள் ஸ்டாலின், திருமூர்த்தி, செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், புதுவையில் லாபகரமாக செயல்பட்டு வரும் மின் துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். தனியார்மயமானால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தடைபடும். அரசுக்கு வரும் வருமானத்தில் பல கோடி இழப்பு ஏற்படும். புயல் போன்ற பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளை உடனடியாக தொடங்க முடியாது. எனவே மின்துறையை தனியாரிடம் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Related Tags :
Next Story