திருப்பூரில் 31-ந் தேதி வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வருகிற 31-ந் தேதி வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15 வேலம்பாளையம் மண்டல அலுவலகம், ஏ.வி.பி.ரோடு, ஆத்துப்பாளையம், பாண்டியன்நகர், கொங்கு மெயின் ரோடு, நல்லூர் மண்டல அலுவலகம், சந்திராபுரம், குமரன் வணிக வளாகம், தென்னம்பாளையம், அரசு ஆஸ்பத்திரி ஆகிய 10 இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்திய காலத்தில் இருந்து அம்மா உணவகங்களில் தொடர்ந்து காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
வீடு இல்லாமல் தெருவோரம் சுற்றித்திரிபவர்கள் பலருக்கு அம்மா உணவகம் மூலமாகவே உணவு வழங்கப்பட்டு வந்தது. அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. சராசரியாக 10 அம்மா உணவகங்களில் நாளொன்றுக்கு 10 ஆயிரத்து 500 பேர் 3 வேளை உணவு சாப்பிடுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் கூறும்போது, ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு அம்மா உணவகங்கள் மூலமாக இலவசமாக உணவு வழங்கப்பட்டது. வருகிற 31-ந் தேதி வரை 10 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. உணவகத்துக்கு வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து வர வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story