1,600 தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் உத்தரபிரதேசத்திற்கு அனுப்பி வைப்பு


1,600 தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் உத்தரபிரதேசத்திற்கு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 22 May 2020 6:15 AM IST (Updated: 22 May 2020 6:15 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் சுற்றுவட்டாரத்தில் பணிபுரிந்து வந்த 1,600 தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலத்திற்கு சிறப்பு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஓசூர், 

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக வெளி மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தங்கி பணிபுரிந்து வந்த சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பர்கூர், கிருஷ்ணகிரி ஆகிய தாலுகாக்களில் உள்ள தொழிலாளர்கள் அவர்களின் சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்திற்கு சிறப்பு ரெயில் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்காக சிறப்பு ரெயில் கர்நாடக மாநிலம் பெங்களூரு பனஸ்வாடியில் இருந்து ஓசூருக்கு 20 பெட்டிகளுடன் வந்தது. இந்த ரெயிலில் கிருஷ்ணகிரி தாலுகாவை சேர்ந்த 236 பேரும், பர்கூர் தாலுகாவை சேர்ந்த 25 பேரும், தேன்கனிக்கோட்டை தாலுகாவை சேர்ந்த 508 பேரும், ஓசூர் தாலுகாவை சேர்ந்த 818 பேரும், சூளகிரி தாலுகாவை சேர்ந்த 13 பேரும் என மொத்தம் 1,600 பேர் அவர்களின் சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு பெட்டிக்கு 80 பேர் என மொத்தம் 20 பெட்டிகளில் 1,600 பேர் அமர வைக்கப்பட்டனர்.

முன்னதாக பயணிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் மருத்துவ சோதனை செய்யப்பட்டது. ஒருவருக்கு பயணச்சீட்டு தலா ரூ.920 வீதம் மொத்தம் 1,600 பேருக்கு ரூ.14 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் பயண சீட்டு தொகையை தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை நிதியின் மூலம் செலுத்தி பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். வெளி மாநில பயணிகளுக்கு ரெயில் பயணத்தின்போது அவர்களுக்கு உண்ண உணவாக சப்பாத்தி, புளிசாதம், 2 லிட்டர் குடிநீர் உள்ளிட்ட பொருட்களை மாவட்ட கலெக்டர் டாக்டர். எஸ். பிரபாகர் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமமூர்த்தி, ஓசூர் உதவி கலெக்டர் குமரேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கு, தனி துணை கலெக்டர்கள் அமீர்பாஷா, குணசேகரன், சேதுராமலிங்கம், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், தாசில்தார் வெங்கடேசன், வருவாய் துறை அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story