திண்டுக்கல் மாவட்டத்தில் தாய்-மகள் உள்பட மேலும் 5 பேருக்கு கொரோனா


திண்டுக்கல் மாவட்டத்தில்  தாய்-மகள் உள்பட மேலும் 5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 22 May 2020 2:10 AM GMT (Updated: 22 May 2020 2:10 AM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் தாய்-மகள் உள்பட மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டத்தில் வெளிமாநிலங்கள், சென்னையில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அந்த வகையில் நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் மொத்தம் 127 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதில் ஒருவர் இறந்து விட்டார். மேலும் 106 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து வெளியூர்களில் இருந்து வந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதில் சென்னை மற்றும் மராட்டியத்துக்கு வேலைக்கு சென்று திரும்பிய 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதில் 2 பேர் பழனி பகுதியை சேர்ந்த தாய் மற்றும் அவருடைய 9 வயது மகள் ஆவர். இவர்கள் மராட்டிய மாநிலத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பி உள்ளனர். அதேபோல் மராட்டியத்தில் வேலை செய்து விட்டு ஊருக்கு திரும்பிய ராஜக்காபட்டி அருகே கல்லுபட்டியை சேர்ந்த வாலிபர், சென்னையில் இருந்து வந்த வத்தலக்குண்டு அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த வாலிபர், செம்பட்டி அடுத்துள்ள கேத்தையகவுண்டன்பட்டியை சேர்ந்த வாலிபரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகினர். இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 132 ஆக உயர்ந்தது. அதில் 23 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், 2 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும் என 25 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story