விருத்தாசலம் பகுதியில் தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள்


விருத்தாசலம் பகுதியில் தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள்
x
தினத்தந்தி 22 May 2020 5:57 AM GMT (Updated: 22 May 2020 5:57 AM GMT)

விருத்தாசலம் பகுதியில் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் பகுதியில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் தங்களை ஈடுபடுத்தியுள்ளனர். முழுக்க நிலத்தடி நீரை நம்பியே விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நிலத்தடி நீர் குறைந்து போய்விட்டது. இதனால் போர்வேல் மற்றும் கிணறுகளின் நீர்மட்டம் சரிந்துவிட்டது.

எனவே குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெல் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் நடவு செய்யப்பட்ட வயல்கள் காய்ந்து, பாளம் பாளமாக வெடித்து கிடப்பதுடன், நெற்பயிர்கள் கருக ஆரம்பித்துவிட்டது. இது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.

இதுகுறித்து விவசாயி ராமச்சந்திரன் கூறுகையில், பல ஆண்டுகளாக ஏரி பாசனத்தின் மூலம் பயிர் செய்து வந்தோம். ஆனால் தற்போது போதிய அளவு மழை பெய்தாலும், ஏரி தூர்வாரப்படாததால் அதிகப்படியான தண்ணீரை சேமித்து வைக்க முடிவதில்லை. எனவே விரைவில் தண்ணீரின்றி வறண்டு போய்விடுகிறது.

இதன் காரணமாக, குறுவை சாகுபடியை கிணறுகளை நம்பியே தொடங்கினோம். கிணறுகளும் தற்போது தண்ணீரின்றி வற்றிவிட்டது. மேலும் அவ்வப்போது மும்முனை மின்சாரமும் தடை செய்யப்படுகிறது. இதுபோன்ற காரணத்தினால், நெல் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கவலையுடன் தெரிவித்தார்.

Next Story