சென்னை சென்டிரலில் ரெயில்வே போலீசார் 23 பேருக்கு கொரோனா - அவர்களது குடும்பத்தினர் 9 பேர் பாதிப்பு
சென்னை சென்டிரல் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் 23 போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறையும், பெருநகர சென்னை மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், தினந்தோறும் கொரோனா புது சவால்களை விடுத்து வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் ரெயில்கள் எதுவும் ஓடாததால், ரெயில்வே போலீசார் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அதன்பிறகு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரெயில்கள் மூலம் வடமாநில தொழிலாளர்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணியில் இருந்த ரெயில்வே போலீசார் மீண்டும் ரெயில் நிலையத்துக்கு பணிக்கு வரவழைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெயில்வே இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது மேலும் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 16 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட ரெயில்வே போலீசார் பெரும்பாலானோர் எழும்பூரில் உள்ள ரெயில்வே போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் போலீஸ் குடியிருப்பில் தங்கியிருந்த அவர்களது குடும்பத்தினர் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களும் மருத்துவமனையில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ரெயில்வே போலீசாரின் தொடர்புகளை முறையாக கண்டறிந்து பரிசோதனை செய்யாததால் தான் ரெயில்வே போலீசார் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்ட பிறகும் கூட போலீஸ் நிலையத்தில் முறையாக கிருமி நாசினி தெளிக்கவில்லை எனவும், எந்த ஒரு முறையான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல் ரெயில்வே போலீசாரை பாதுகாப்பில் ஈடுபடுத்துவதாகவும் போலீசார் மத்தியில் புகார்கள் எழுகிறது.
Related Tags :
Next Story