கோவையில் சராசரியை தாண்டி பெய்த கோடை மழை அதிகாரி தகவல்


கோவையில் சராசரியை தாண்டி பெய்த கோடை மழை  அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 23 May 2020 4:40 AM IST (Updated: 23 May 2020 4:40 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் இந்த ஆண்டு சராசரியை தாண்டி கோடை மழை 142 மி.மீ. என்ற அளவுக்கு பெய்து உள்ளது என்று கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் தெரிவித்து உள்ளார்.

கோவை,

தமிழகத்தில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை தவிர்த்து கோடை மழை மூலமாகவும் மழைநீர் கிடைக்கிறது. மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் இந்த கோடை மழை பெய்கிறது. கோவையில் இந்த ஆண்டு கோடை மழை சராசரி அளவை தாண்டி பெய்து உள்ளது. இதுகுறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ராமநாதன் கூறியதாவது:-

கடந்த 30 ஆண்டுகளில் பெய்த மழை அளவை கொண்டு சராசரி மழை அளவு கணக்கிடப்படுகிறது. இதன்படி கோவையில் கோடை மழை சராசரி அளவாக 137 மில்லி மீட்டர் உள்ளது. ஆனால் இந்த ஆண்டு கோடை மழை சராசரி அளவை தாண்டி 142 மி.மீ. அளவுக்கு பெய்து உள்ளது. இதில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஓரளவு மழை கிடைத்து உள்ளது. கோடை காலம் முடிய இன்னும் சில நாட்களே உள்ளன.

பருவமழை

கோடை மழை முடிந்ததும் தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை 189.8 மில்லி மீட்டர் பெய்ய வேண்டும். ஆனால் இந்த ஆண்டு சராசரியை விட அதிகமாக 194 மி.மீ. அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் சராசரியாக 759.9 மி.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் நடப்பாண்டில் 770 மி.மீ. அளவுக்கு சராசரியை விட அதிகமாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.

திருப்பூர் மாவட்டத்தில் சராசரியாக 154.8 மி.மீ.மழை பெய்ய வேண்டும். ஆனால் நடப்பாண்டில் அதை விட குறைவாக 144 மி.மீ. அளவுக்கு மழை பெய்யும். கடந்த ஆண்டு கோவையில் பருவமழை நன்றாக பெய்தது.

இவ்வாறு அவர் கூறினர்.

கோவையில் கோடை மழை சராசரியை தாண்டி பெய்து உள்ளதால் குளங்கள், குட்டைகளில் ஓரளவு தண்ணீர் காணப்படுகிறது. மேலும் இந்த கோடை மழையால் கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை காலத்தின் போது பெரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story