நெல்லையில் இருந்து ராஜஸ்தான், ஜார்கண்டுக்கு 612 பேர் பயணம்


நெல்லையில் இருந்து ராஜஸ்தான், ஜார்கண்டுக்கு 612 பேர் பயணம்
x
தினத்தந்தி 23 May 2020 12:24 AM GMT (Updated: 23 May 2020 12:24 AM GMT)

நெல்லை மாவட்டத்தில் இருந்து 612 பேர் நேற்று ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் இருந்து 612 பேர் நேற்று ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்கு சென்று வேலை செய்து வருகிறார்கள். இவ்வாறு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க திடீரென்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர். 4-வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தினர்.

இதையொட்டி வடமாநில தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த 12-ந்தேதி பீகார் மாநிலத்தை சேர்ந்த 1,330 தொழிலாளர்கள், 13-ந்தேதி ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 1,426 பேர், 16-ந்தேதி உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 1,437 தொழிலாளர்கள் நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து ரெயிலில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 16-ந்தேதி பீகார் மாநிலத்தை சேர்ந்த 326 பேர் தூத்துக்குடி ரெயில் நிலையம் வழியாகவும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ராஜஸ்தான் சென்றனர்

நேற்று மேலும் 612 பேர் ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கன்னியாகுமரியில் இருந்து கேரளா வழியாக ராஜஸ்தானுக்கு நேற்று சிறப்பு ரெயில் புறப்பட்டு சென்றது.

இந்த ரெயிலில் நெல்லையில் வசித்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 104 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று காலை அரசு பஸ்கள் மூலம் நெல்லையில் இருந்து கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அவர்கள் மூட்டை, முடிச்சுகளுடன் பஸ்சில் ஏறி பயணம் செய்தனர். கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் ராஜஸ்தானுக்கு புறப்பட்டு சென்றனர்.

ஜார்கண்டுக்கு பயணம்

இதேபோல் நேற்று மாலை நாகர்கோவிலில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் நேற்று மாலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது நெல்லை மாவட்டத்தில் வேலை செய்து வந்த ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 508 பேர் அழைத்து வரப்பட்டு ரெயில் நிலையத்தில் சமூக இடைவெளியுடன் பிளாட்பாரத்தில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பெட்டிகளில் பாதுகாப்பாக ஏற்றி ஜார்கண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் செல்லும் ரோடு மூடப்பட்டது. வெளிஆட்கள் நுழைந்து விடாமல் இருக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story