மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கடலூரில் அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கடலூர்,
8 மணி நேர வேலையை 12 மணிநேரமாக மாற்றாதே, தொழிலாளர்களை அடிமைப்படுத்த முயற்சிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டிப்பது, தொழிலாளர் சட்டங்களை இடைநீக்கம் செய்யக்கூடாது.
புதிய மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும். நல வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், பொதுத்துறையை தனியார் மயமாக்காதே என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கடலூர் மாவட்டத்தில் 300 இடங்களில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கருப்பையன், மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் குளோப், தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் துணை செயலாளர் எத்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகிகள் ஆளவந்தார், பாபு, சுப்புராயன், ஏ.ஐ.டி.யு.சி. ஜெயராஜ், சுந்தர்ராஜா, இளங்கோ, அரிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட பொருளாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு கோரிக்கையை விளக்கி பேசினார்.
இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாமணி, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில தலைவர் சரவணன், ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரராஜா, பலராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டனர்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்தும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு உழைக்கும் மக்கள் கூட்டமைப்பினர் கையில் கருப்பு கொடி ஏந்தியும், கண்ணில் கருப்பு துணி கட்டியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மணிவண்ணன் தொடங்கி வைத்தார்.
இதில் சிறு வியாபாரிகள் சங்க தலைவர் பாலு, ஜெகரட்சகன், ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைத்து ஓய்வூதியர் சங்கத்தினரும் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தொழிற்சங்கத்தினர் கையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. மண்டல தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மண்டல துணை தலைவர் பாஸ்கரன், எம்.எல்.எப். பொதுச்செயலாளர் மணிமாறன், ஏ.ஏ.எல்.எல்.எப். பொதுச்செயலாளர் கருணாநிதி, ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே, தொழிலாளர் நல சட்டங்களை சீர்குலைப்பதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். புதிய மின்சார சட்டத்திருத்த மசோதாவை கைவிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க நிர்வாகிகள் கையில் கருப்பு கொடி ஏந்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story