ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 1,464 பேர் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர்
ஈரோடு மாவட்டத்தில் வேலை செய்து வரும் வட மாநில தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.
ஈரோடு,
சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏற்கனவே விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து சுமார் 17 ஆயிரம் வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலம் திரும்ப விண்ணப்பித்து இருந்தனர். தற்போது பல பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்க தொடங்கி இருப்பதால் அதில் பலரும் தொடர்ந்து வேலை செய்ய முன்வந்து இருக்கிறார்கள். மற்றவர்கள் மாநிலம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.
கடந்த 20-ந் தேதி உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் ஒடிசாவை சேர்ந்தவர்கள் புறப்பட்டு சென்றனர். அதைத்தொடர்ந்து நேற்று ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 1,464 பேர் புறப்பட்டனர். இவர்களுக்கான சிறப்பு ரெயில் நேற்று ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.
இதை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் ஈரோடு அழைத்துவரப்பட்டனர். முன்னதாக ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபம், தமயந்தி பாபுசேட் திருமண மண்டபம் மற்றும் தாலுகா அலுவலக வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
பெருந்துறை பகுதி ஆலைகளில் வேலை செய்து வந்த ஜார்கண்ட் மாநில பெண்கள் அதிக அளவில் நேற்று தங்கள் ஊருக்கு திரும்பி சென்றார்கள். இவர்கள் தாலுகா அலுவலக வளாகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காலையில் இருந்தே காத்து இருந்தனர்.
பின்னர் தொழிலாளர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. உணவு வழங்கப்பட்டது. அனைவருக்கும் அதிகாரிகள் அறிவுரைகள் வழங்கினார்கள். ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி சேலம், தர்மபுரி, கரூர் மாவட்டங்களில் வேலை செய்து வந்த தொழிலாளர்களும் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு இருந்தனர். 4 மாவட்டங்களையும் சேர்த்து மொத்தம் 1,464 பேர் நேற்று ரெயிலில் புறப்பட்டு சென்றனர்.
மாலை 6 மணிக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்தில் சென்று சேரும். தொழிலாளர்களை ரெயில் மூலம் அனுப்பி வைக்கும் பணிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன் ஆகியோர் பார்வையிட்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ், ராஜூ மற்றும் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
ரெயில் நிலையத்தில் பிற நபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ரெயில் மூலமாக சென்ற ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்களில் 250 பேர் பெருந்துறையில் தங்கியிருந்தவர்களாவர். ஏற்கனவே பெருந்துறையில் தங்கியிருந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 500 பேரும், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 500 பேரும் ஈரோட்டில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களில் புறப்பட்டு சென்றார்கள்.
3-வது முறையாக ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 250 பேர் நேற்று புறப்பட்டனர். முன்னதாக அவர்களுக்கு பெருந்துறை தாலுகா அலுவலகத்தில் ஆவணங்கள் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகளும், பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் இந்த பணியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்களுக்கு ரெயில் பயணத்துக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன. அதன்பின்னர் அவர்கள் பஸ்கள் மூலமாக ஈரோடு ரெயில் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
Related Tags :
Next Story