வெள்ளிப்பட்டறை தொழிலாளி மர்மசாவு: சேலத்தில் பொதுமக்கள் சாலை மறியல் 15 பேர் கைது


வெள்ளிப்பட்டறை தொழிலாளி மர்மசாவு: சேலத்தில் பொதுமக்கள் சாலை மறியல் 15 பேர் கைது
x
தினத்தந்தி 24 May 2020 2:03 AM GMT (Updated: 24 May 2020 2:03 AM GMT)

சேலத்தில் வெள்ளிப்பட்டறை தொழிலாளி மர்மமாக இறந்ததால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

சூரமங்கலம்,

சேலத்தில் வெள்ளிப்பட்டறை தொழிலாளி மர்மமாக இறந்ததால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

வெள்ளிப்பட்டறை தொழிலாளி

சேலம் திருவாக்கவுண்டனூர் அருகே உள்ள சுகுமார் காலனியை சேர்ந்தவர் சரவணன் (வயது 40), வெள்ளிப்பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் திலகம் (45). அ.தி.மு.க. பிரமுகரான இவர் சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. சரவணன் இதுகுறித்து திலகத்திடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இதுதொடர்பாக கடந்த 21-ந் தேதி சரவணன் தரப்பினருக்கும், திலகம் தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இது குறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சரவணனை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம், தகராறு ஏதும் செய்யக்கூடாது என எழுதி வாங்கிக்கொண்டு விட்டுவிட்டனர்.

மர்மசாவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு வந்த சில மணி நேரங்களில் சரவணன் மர்மமான முறையில் இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த சுகுமார் காலனியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று திருவாக்கவுண்டனூர் புற வழிச்சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், சரவணனின் இறப்பு குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், திலகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் மறியலில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே திலகத்தை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story