தூத்துக்குடியில் இருந்து ஒடிசா மாநிலத்துக்கு 190 தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்


தூத்துக்குடியில் இருந்து ஒடிசா மாநிலத்துக்கு 190 தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்
x
தினத்தந்தி 25 May 2020 5:15 AM IST (Updated: 24 May 2020 10:44 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இருந்து ஒடிசா மாநிலத்துக்கு 190 தொழிலாளர்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இன்றி அவதிப்பட்டு வந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 700 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.

இதில் 4 ஆயிரத்து 700 பேர் சொந்த ஊருக்கு செல்வதற்காக இணையதளத்தில் பதிவு செய்தனர். அதன்பேரில் ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம் மாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் மூலம் தொழிலாளர்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டனர்.

நேற்று நெல்லையில் இருந்து ஒடிசாவுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வந்த ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 190 பேர் நேற்று தூத்துக்குடி துறைமுகம் அருகே அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் அரசு பஸ்கள் மூலம் நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து ரெயில் மூலம் ஒடிசாவுக்கு செல்கின்றனர்.

Next Story